பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர்

🕔 June 9, 2017

றக்காமம் முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களில்  இலவசமாக குடிநீர் இணைப்பினைப் பெற்றுக் கொண்ட பயனாளிகளிடமிருந்து, பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், முஸ்லிம் காங்கிரசின் இறக்காமம் மத்திய குழுவினர் தமது மறுப்பினைத் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிக்காரர்கள் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான செய்தியினைப் பரப்பி விட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறக்காமத்திலுள்ள முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களிலுள்ள 80 குடும்பங்களுக்கு குடிநீரை இலவசமாக வழங்கும் பொருட்டு,  சஊதி அரேபியாவின் நிதாவுல் ஹைர் எனும் நிறுவனம் நிதியுதவியினை வழங்கியிருந்தது.

எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரசின் இறக்காமம் மத்திய குழுவினர், மேற்படி குடிநீர் இணைப்பினை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர் இது தொடர்பாக, மேலும் தெரிவிக்கையில்;

முஹைதீன், ஜபல் கிராமங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு தொடர்பான நடவடிக்கைகளை மு.காங்கிரசின் இறக்காமம் மத்திய குழுவும், கட்சியின் ஆதரவாளர்களும் இணைந்தே மேற்கொண்டார்கள். ஆனால் இதற்காக ஒரு சதமேனும் எங்களால் பணம்  அறவிடப்படவில்லை என்பதை நற்கூலி பெறும் இந்த நல்ல மாதத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசியர் குறிப்பு:

01) சஊதி அரேபியாவின் தொண்டு நிறுவனம், மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்குவதற்காக மொத்த நிதியினையும் வழங்கியிருந்த நிலையில், மு.காங்கிரசின் இறக்காமம் மத்திய குழுவினர் இத்திட்டத்தில் எதற்காக தலையிட வேண்டும்?

02) தொண்டு நிறுவனம் வழங்கிய இலவச குடிநீர் இணைப்பினை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஏன் அதிதிகளாகக் கலந்து கொள்ள வேண்டும்?

03) சஊதி அரேபியாவின் தொண்டு நிறுவனத்தின் பணியை, மு.காங்கிரஸ் தனது பணிபோல் மக்களிடம் காட்டியமை, மக்களை ஏமாற்றும் அரசியல் செயற்பாடாகும்

(எவ்வாறாயினும், எமக்கு குறித்த செய்தியினை அனுப்பி வைத்த ஊடகவியலாளரிடம் இதற்கான பதிலை கோரவுள்ளோம்)

தொடர்பான செய்தி: இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்