மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

🕔 April 27, 2017

– ஏ.எல். ஏ. அனீஸ் (இறக்காமம்) –

றக்காமம் – மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக தடுக்க முடியாமல் தோற்றுப் போன முஸ்லிம் காங்கிரஸ், நாளை வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு, அநாமேதயத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களை தூண்டுவது கேவமான செயற்பாடகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாயக்கல்லி மலை விவகாரத்துக்கு எதிராக, அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களை நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறும், அந்தந்த பகுதியிலுள்ள பிரதேச செயலாளரிடம் ஆர்பாட்டக்காரர்கள் தமது மகஜர்களை கையளிக்குமாறும் கோரி, இன்று வியாழக்கிழமை பல்வேறு பெயர்களில் துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்டன.

மக்களை இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுமாறு கோரி வீசப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் பின்னணியில் மு.காங்கிரசும், அந்தக் கட்சியின் உள்ளுர் அரசியல்வாதிகள் சிலரும் இருப்பதாக அறியமுடிகிறது.

மாயக்கல்லி மலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி புத்தர் சிலையொன்று அடாத்தாக வைக்கப்பட்டபோது, இறக்காமம் பகுதிக்கு வருகை தந்த மு.கா. தலைவர், அந்த சிலையினை பார்வையிட்டுச் சென்றிருந்தார். அதன் பின்னர், பிரதமரை மு.கா. தலைவர் சந்தித்ததாகவும், இரண்டு வாரங்களுக்குள் புத்தர் சிலை அகற்றப்படுமென்று பிரதமர் வாக்குறுதியளித்தார் என்று மு.கா. தலைவர் தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆயினும், மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டு 06 மாதங்களாகியும் சிலை அகற்றப்படவில்லை. அதேவேளை, அதன் பிறகு – இந்த விவகாரம் தொடர்பில் மு.கா. தலைவர் அக்கறை காட்டியதாகவும் தெரியவில்லை.

இந்த நிலையில், தற்போது மாயக்கல்லி மலைக்கு அருகிலுள்ள முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து, அதில் விகாரையொன்று நிர்மாணிக்கப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந் நடவடிக்கையானது, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடையே பெரும்  ஆத்திரத்தை உண்டு பண்ணியுள்ளது.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 04 மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்டுள்ள மு.காங்கிரஸ்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் வாய்மூடி இருப்பதும் மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாயக்கல்லி மலை விவகாரத்தில் மக்களை வைத்து, ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும், அதனால் கிடைக்கும் அரசியல் லாபத்தினை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கும் மு.காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த திட்டத்துக்கு அமைவாகவே, மாயக்கல்லி மலை விவகாரத்துக்கு எதிராக நாளைய தினம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ‘பொதுமக்கள்’, ‘இளைஞர்கள்’ போன்ற பெயர்களில் அநாமேதய துண்டுப் பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த நாடகத்தின் பின்னணியில் மு.காங்கிரஸ் உள்ளமையும்  அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் இறக்காமம் – மாயக்கல்லி மலைப் பகுதிக்கு மு.கா. தலைவர் வருகை தரவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

மாயக்கல்லி மலை விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாமல் போன முஸ்லிம் காங்கிரஸ்; மக்களை வைத்து ஆட நினைக்கும் இந்த நாடகத்துக்கு, யாரும் துணை போய்விடக் கூடாது என்றும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாயக்கல்லி மலை விவகாரத்துக்கு எதிராக பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென்றால், ஒவ்வொரு பகுதியிலுமுள்ள பள்ளிவாசல்களின் நிருவாகங்கள் அவற்றினை ஒழுங்கமைக்க முடியும் என்றும், அவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்