SLMC – NFGG கூட்டு: ஒரு நேரான பார்வை

🕔 July 11, 2015

Aroos - 01லங்கை முஸ்லிம்களின் அரசியல் பேசுபொருளாக ‘SLMC – NFGG கூட்டு’ என்பது, இன்று பிரதான இடம் பிடித்திருக்கின்றது. இந்த விடயமானது பலராலும் பலவாறு நோக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. மேற்படி ‘SLMC – NFGG கூட்டு’ விவகாரம் பற்றி முகநூல் நண்பர்களும் சில இணையத்தளங்களும் விமர்சித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது யார் எப்படி விமர்சித்தாலும், யார் என்ன சொன்னாலும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளைத் தனித்துவப்படுத்திக் காட்டிய முதலாவது கட்சி என்றால் இதனை யாராலும் மறுக்க முடியாது. அதன் ஆரம்பத் தாக்கம் இலங்கை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கவே முடியாத மானசீகமானதொன்றாகவே இருந்து வருகிறது. இடையிலே எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் – இக்கட்சி ஏராளமான உடைவுகளையும் சவால்களையும் கண்டுங்கூட, இன்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முதன்மைக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இருந்து வருகிறது. இது முகநூல் நண்பர்களக்குத் தெரியாவிட்டாலும் எமது பேரினத் தலைமைகளுக்கும் சர்வதேசத்திற்கும் நன்றாகவே தெரியும். காலத்திற்குக் காலம் எம்மவர்களால் அதிகமாக விமர்சிக்கப்படும் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான், அதே வேளை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகமாகப் பெற்றுக்கொள்ளும் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ்தான்!

சவால்கள்

ஆனால், எமது தேசம் கடந்த காலங்களில் ஒரு பேரினவாத அரக்கனின் பிடியில் மாட்டிக்கொண்டதன் விளைவாய், நாட்டின் சகல பிரஜைகளும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்த துன்பங்களைப் போலவே, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் சொல்லொண்ணா சவால்களை SLMC - 01எதிர்கொள்ள வேண்டியேற்பட்டதென்னவோ உண்மைதான். அக்காலகட்டத்தில் நிறையத் தடவை, இருதலைக் கொள்ளி எறும்பாய், கட்சியின் தலைமை உட்பட மாட்டித் திணறியதும் உண்மைதான். பேரினவாதத்தின் சூழ்ச்சிகளில் மாட்டிக்கொண்டு கட்சி பல உடைவுகளைச் சந்தித்ததும்
உண்மைதான்.

ஆனால் அதற்காக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கையாலாகாதவர் என்றோ, அரசியல் சாணக்கியமற்றவர் என்றோ, முற்று முழுதும் சமூக நலனில் அக்கறை அற்றவர் என்றோ கூறிவிட முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய அதிகமான விமர்சனங்களுக்குக் காரணமாய் அமைந்த விடயம் யாதெனில், விமர்சிப்பவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களை மையப்படுத்தி சிந்திக்கும் அதே சமயம், தலைமையோ – தேசிய ரீதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் சிந்தித்து முடிவெடுப்பதனாலாகும்.

இவ்வாறு நான் கூறுவதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸிற்கு ஜால்ரா அடிப்பதாக யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். நானும் ஏராளமான விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய

விமர்சனங்களை எனது எழுத்துக்களினூடாக அவ்வப்போது மிகக் காரமாகப் பதிவு செய்திருக்கிறேன். முஸ்லிம் காங்கிரஸ்  மாத்திரமல்ல, ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தலைமைகளைப் போல – உரிமை அரசியல் செய்யவில்லை, மாறாக சுகபோக அரசியலே செய்துவருகிறார்கள் என நியாயமாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், நான் இந்தக் கட்டுரையில் தெளிவுபடுத்த விளையும் விடயத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய நேரான பார்வையும் அத்தியவசியமாகின்றது. ‘…உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான விடயத்தின் பக்கம் முதலில் வாருங்கள்…’ (அல்குர்ஆன் 3:64) எனும் இறை வழிகாட்டலுக்கிணங்கவே இக்கட்டுரையை எழுத முற்பட்டேன்.

அறிமுகம்

NFGG ஐப் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) பொறுத்த வரையில் PMGG என்ற பெயருடன் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவ்வியக்கம், ஆரம்பந்தொட்டே அழகியதொரு நேர்மையான அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியும் நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. அத்தோடு அவ்வப்போது உண்மையின் பக்கம் உறுதியாக நின்று விமர்சன அரசியலையும் செய்து வருகின்றது. இவ்வியக்கத்தினரின் சமகால அரசியல் நகர்வுகளை நோக்கும் போது, மிகச் சாணக்கியமான முன்னெடுப்புக்களைக் கண்டு கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. கறை படியாத கரங்களும், சுயநலமற்ற சிந்தனைகளும் இவர்களது ‘பிளஸ் பொய்ன்ற்’கள்.

NFGG இனரால் அரசியல் தளத்தில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவர்கள், முஸ்லிம் காங்கிரஸினர்தான். ஆனால் எந்த இடத்திலும், முஸ்லிம் காங்கிரஸினர் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என்றோ அவர்களது அரசியல் முஸ்லிம்களுக்குத் தேவையில்லையென்றோ NFGG இனரின் விமர்சனங்கள் அமையவில்லை. எனது அவதானிப்புக்குட்பட்டவற்றுள், ஒரு சகோதரனை வழிநடாத்தும் அறிவுரைகளாகவே NFGG இனரின் விமர்சனங்கள் அமைந்திருந்தன.

முஸ்லிம் சமூகம் – மாற்று அரசியல் கலாசாரத்தினைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார்களே தவிர, முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்தி – முஸ்லிம்களுக்கான புதிய தலைமைத்துவமாக தாம் உருவெடுக்கவேண்டும் என்ற தலைமைத்துவ மோகமோ, பதவி ஆசைகளோ NFGG இடம் இருந்ததாக நானறியவில்லை.

கூட்டணி

இந்தப் பின்னணியிலேதான் ‘SLMC – NFGG கூட்டு’ எனும் விடயத்தினை நாம் நோக்க வேண்டியிருக்கிறது. தேசத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது, NFGG - 01முடியுமான வரைக்கும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்று படவேண்டும் என்பதையும் தாண்டி, சிறுபான்மையினராகிய நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.
இதன் வெளிப்பாடாக, கடந்த  – வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ‘சிறுபான்மையினர் ‘என்ற ரீதியில் ஒன்றிணைந்து, ‘போனஸ்’ மூலம் – ஒரு மாகாண சபை உறுப்பினரைப் பெற்றுக்கொண்ட NFGG , நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் – கூட்டாகச் சேர்ந்து, முஸ்லிம் உறுப்பினர்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதில் தவறேதுமிருப்பதாகத் தோன்றவில்லை.

இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் முதுசொமாகத் திகழ்கிற முஸ்லிம் காங்கிரஸூம், சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கூட்டுச் சேர்ந்திருப்பதானது, பேரினவாதிகளுக்கும் அரசியல் சுயநலமிகளுக்கும் வேண்டுமானால் அதிர்ச்சியையும் பயத்தையும் உண்டுபண்ணியிருக்கலாம். ஆனால் நேர்மையாகச் சிந்திக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இதுவொரு இனிப்பான செய்திதான்.

நன்மை

கடந்த காலங்களில் NFGG தனித்துப் போட்டியிட்டதனால், வாக்குகள் துண்டாடப்பட்டு கிடைக்கவேண்டிய முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை இழக்கப்படுகிறது என்கிற விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஆனால், இம்முறை அந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்கு இந்த ‘SLMC – NFGG கூட்டு’ வழிசமைக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்!

வரலாறுகளின் அடிப்படையில் பிரிவினைதான் தோல்விகளுக்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன. ஒன்றுபடுதல் விமர்சனங்களுக்குட்படலாம், ஆனால் – அது வெற்றியின் அடையாளம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதுவும், ஒன்றுபட வேண்டிய தருணத்தில் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் – இவ்விரு முஸ்லிம் அமைப்புக்களினதும் கூட்டானது உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டியதும் ஆரோக்கியமானதுமேயாகும். இந்த முன்னெடுப்பினைப் பற்றி ஒற்றை வாக்கியத்தில் சொல்வதானால் ‘பூவுடன் கூடிய நாரும் மணம் வீசும்!’ என்று கூறலாம். இங்கு யார் பூ? யார் நார்? என்கிற விவாதம் நமக்கு அத்தியவசியமற்றது. ஏனெனில் எதுவானாலும் மணம் கிடைக்கப்போவது நமது சமூகத்திற்குத்தான்!

Comments

புதிது பேஸ்புக் பக்கம்