செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி: அவர் பெயர் அப்துல் காதர்

🕔 April 9, 2017

ள்ளல்தன்மையைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், நம் நினைவு அடுக்குகளில் இவர்கள்தான் வந்து போவார்கள். முதலில் வருபவர் மகாபாரத கர்ணன். தொடர்ந்து முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி உள்ளிட்ட கடையெழு வள்ளல்கள், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் என்று இந்த வரிசையில் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியையும் சொல்வார்கள். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியின் பெயர் அப்துல்காதர் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்?

வலதுகை கொடுப்பது இடதுகைக்குத் தெரியாமல் கொடுத்தவர் அப்துல்காதர்.

இந்தியாவின் தென் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் கீழக்கரைப் பகுதியில் 1650-ல் பிறந்து வளர்ந்த இஸ்லாமியர்.  கப்பலில் பல நாடுகளுக்குச் சென்று முத்து வணிகம் செய்தவர். மார்க்க நெறிகளையும் சமய ஒழுங்குகளையும் முறையாகப் பின்பற்றிய சமயத்தலைவர் மட்டுமல்ல. அந்தப் பகுதியிலேயே மிகப்பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தவர். இல்லையென்று வந்து கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாது வாரி வழங்கிய வள்ளல்.

கல்வி பயிலும் மாணவர்களோ, தமிழ்க்கவி பாடும் புலவர்களோ வந்து விட்டால் அன்று அவரது வீட்டில் தடபுடல் விருந்துதான். அவர்கள் புறப்படும்போது மனம் நிறைய பொருட்செல்வத்தை வாரி வழங்கித்தான் வழியனுப்பி வைப்பார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வந்திருப்பவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதுபோன்ற   மதவேற்றுமையை எல்லாம் இவர் பார்க்கமாட்டார். அவர் கல்விமானா, தமிழ்ப்புலமை மிக்கவரா என்று மட்டும்தான் பார்ப்பார். இவற்றையெல்லாம் அவருக்கு போதித்து அவரை மனிதரில் மாணிக்கமாக உருவாக்கியவரர் இஸ்லாமியப் பெரியவர் ‘சதக்கத்துல்லா வொலி’ என்பவர்.

* ராமநாதபுரத்தை ஆண்டசேதுபதி மகாராஜா  சீதக்காதியின் நெருங்கிய நண்பர். சேதுபதிக்குச் சீதக்காதி அவர்கள்  ஆலோசனைகள் வழங்கும் அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

* டில்லியை ஆண்ட முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் சீதக்காதியின்பால் பெருமதிப்புக் கொண்டவர். சீதக்காதியை வங்காளத்தின் கலீபாவாக நியமித்தார்.

* நபிகள் நாயகத்தின் பெருமைகளைச் சொல்லும் ‘சீறாப்புராணம்’  உருவாக புலவர் உமறுபுலவருக்கு பெரும் நிதியை வழங்கி ஆதரித்தார்.
சீதக்காதியை வறியவர் ஒருவர்  சந்தித்து தமது மகளின் திருமணத்துக்காக உதவி கேட்டார். உடனே அவருக்கு பொருளுதவி தர முன் வந்தார். ஆனால், வந்தவரும் ஆகச் சிறந்த மனிதர் என்பதால், இந்த பணம் உங்களிடமே இருக்கட்டும். திருமணம் முடிவானதும், நான் வந்து பெற்றுக்கொள்வதாக் கூறிச் சென்றார்.

சில மாதங்கள் கழித்து, மகளுக்கு திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு, சீதக்காதியைப் பார்க்க வந்த வறியவருக்கு, சீதக்காதி இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தியே காத்திருந்தது. ‘உதவுகிறேன்’ என்று கூறிய வள்ளல் சீதக்காதியின் உடலைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்துவோமென சென்றார்.
உடல்  நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று மலர்களால் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்குள்ளவர்களிடம் தன் கதையைச் சொல்லி கண்கலங்கினார்.

என்ன ஓர் ஆச்சர்யம்!

அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வள்ளல் பெருமகனாரின் வலது கரம் நீண்டது. அதில் விலையுயர்ந்த அழகிய முத்துக்கள் பதிக்கப்பட்ட மோதிரம். இதைப் பார்த்த அங்கு கூடியிருந்த சபையோர்கள் பெரிதும்  வியப்புற்று அந்த மோதிரத்தை அந்த வறியவருக்கு வழங்கினர். அந்தமோதிரமோ பல ஆயிரம் பொன் மதிப்புள்ளது. அதுமுதலாக அவரை செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி என்று அழைக்கலாயினர்.

நன்றி: ஆனந்த விகடன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்