நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம்

🕔 March 15, 2017

– முன்ஸிப் அஹமட் –

சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாட்டில் இல்லாத நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி பணியாற்றுமாறு, அவரை மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பணித்துள்ளார் என்று, மு.கா. தலைவரின் ஊடகப் பிரிவினால் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார பிரதியமைச்சர் மலேசியாவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, அவரை, ரஊப் ஹக்கீம் பணித்தார் என, ஹக்கீமின் ஊடகப் பிரிவினர் செய்தியொன்றினைப் பரப்பி வருகின்றனர்.

நேற்று செவ்வாய்கிழமை காலை, பிரதியமைச்சர் பைசால் காசிம் மலேசியா பயணமானார் எனத் தெரியவருகிறது.

சிலவேளை,  பிரதியமைச்சர் பைசல் காசிம் நேற்று மலேசியா பயணமாவதற்கு முன்னதாக, ஹக்கீம் இந்தப் பணிப்புரையினை விடுத்திருந்தார் என, ஹக்கீம் தரப்பு சிலவேளை வாதிடுவதற்கு முயற்சிக்கலாம்.

அவ்வாறு சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமிடம் மு.கா. தலைவர் ஹக்கீம் பணிப்புரை விடுத்திருந்தால், பைசால் காசிம் தனது பயணத்தினை உடனடியாக ரத்துச் செய்துவிட்டு, கிண்ணியாவில் நிலவும் டெங்கு அச்சுறுத்தல் தொடர்பில், தலைவரின் பணிப்புரைக்கமைவாக களத்தில் நின்று செயற்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனவே, கிண்ணியாவில் டெங்கினால் ஏற்பட்டுள்ள கவலைக்குரிய நிலைவரத்திலும், மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – அரசியல் லாபம் தேட முயற்சித்துள்ளமை, இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதேவேளை, டெங்கினால் கிண்ணியாவில் நேற்றுவரை 12 பேர் மரணமடைந்துள்ள நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்; அது குறித்து அக்கறையற்றவராக, ரஊப் ஹக்கீமுடன் சஊதி அரேபியாவுக்குப் பயணமாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது ஊரில் டெங்கினால், பாரியளவு மரணம் நிகழ்ந்து வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக், வெளிநாடு சுற்றித் திரிய வேண்டிய அவசியம் ஏன் எனும் கேள்வி இங்கு எழுவதும் தவிர்க்க முடியாதது.

எனவே,  மக்களின் துயரத்திலும் அரசியல் லாபம் தேட முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தவரையில் ஏதாவது செய்வதற்கு மு.கா. தலைவர் முயற்சிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.

தொடர்பான செய்தி: கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்