போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை

🕔 March 11, 2017

– ஹனீக் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நமது சமூகம் வழங்கிய வாக்கின் பலத்தினை வைத்துக் கொண்டு, அந்தக் கட்சியானது நமது இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசிலுள்ள சிலர் நமது பெண்களை படுக்கைக்கு அழைக்கின்றனர்” என்று, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கவலை தெரிவித்தார்.

“மு.காங்கிரசின் முக்கியஸ்தர் ஒருவரினால் பாலியல் உறவுக்காக அழைக்கப்பட்ட சகோதரியொருவர், என்னிடம் கண்ணீர் விட்டழுது அந்த விடயத்தைக் கூறினார். அதனை கட்சித் தலைவரிடம் சென்று நான் முறையிட்டேன். ஆனால், அது குறித்து தலைவர் விசாரிக்கவில்லை. விசாரிக்கும் நிலையில் தலைவரும்  இல்லை” என்றும் அவர் கூறினார்.

மரத்தின் வேர்களுக்கு விளம்பல் எனும் தலைப்பில், மு.காங்கிரசின் தலைவரினால் சமூகத்துக்கும், கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இழைக்கப்பட்ட அநியாயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும், இரண்டாவது பொதுக்கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொத்துவிலில் இடம்பெற்றது.

மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட, இக்கூட்டத்துக்கு பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.ஏ. தாஜுதீன் தலைமை தாங்கினார்.

மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, உயர்பீட உறுப்பினர் அன்சில் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“நாங்கள் வழங்கிய வாக்கினூடாக மு.காங்கிரசுக்குள் அதிகாரத்துக்கு வந்தவர்கள், பஞ்சமா பாதகங்கள் அனைத்தினையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் நிறுத்தி விட்டு, அவர்களை கறைபடியாத கரங்களையுடையவர்கள் என்றும், தானைத் தளபதிகள் என்றும், எம்மால் இனி ஒருபோதும் புகழ்பாட முடியாது.

தானைத் தலைவர் என்று, எங்கள் கட்சியின் தலைவரைப் பார்த்து இனிமேல் என்னால் கூற முடியாது.

ஏராளமான பஞ்சமா பாதகங்கள் இந்தக் கட்சிக்குள் நடக்கின்றன. அவ்வாறு பாதகச் செயல்களைப் புரிகின்றவர்களை விசாரியுங்கள் என்று தலைவரிடம் கூறினால், எங்களைக் கேள்வி கேட்பதற்கு, தலைவர் என்ன சுத்தமானவரா என்று, சம்பந்தப்பட்டவர்கள் எங்களிடம் கேட்கின்றார்கள்.

நமது கட்சிக்குள் நடந்துள்ள அசிங்கங்கள் பற்றி மேலோட்டமாகவே நான் கூறுகின்றேன். அவை குறித்து ஆழமாகப் பேசுவதற்கு கூச்சமாகவுள்ளது. ஆனாலும், அவை குறித்து பேச வேண்டியேற்பட்டால், பேசுவோம். விடமாட்டோம்.

அஷ்ரப்பின் கொள்கைகள் இந்தக் கட்சிக்குள் மீளவும் கொண்டு வரப்பட வேண்டும். நாங்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு விட்டதாக சிலர் கூறிக் கொள்கின்றனர். அதனால்தான், இவ்வாறான மேடைகளில் நாங்கள் ஏறுவதாகவும்  பேசிக் கொள்கின்றனர். இதுவெல்லாம் தேவையற்ற கதைகளாகும். எங்களை வேறெருவர் மூளைச் சலவை செய்யுமளவுக்கு, நாங்கள் மந்த புத்தியுடையவர்களல்லர்.

எமது கட்சிக் கீதத்துக்கு எழுந்து நின்று நாங்கள் மரியாதை செய்கின்றோம். அந்தக் கீதத்திலுள்ள கருத்துக்களுக்காவே நாம் அவ்வாறு மரியாதை செய்கின்றோம். அசத்தியம் ஒழிக, சூது ஒழிக என்று நமது கட்சிக் கீதத்தில் கூறப்படுகிறது. ஆனால், அந்த அசத்தியமும், சூதும் நமது கட்சிக்குள் மலிந்து கிடக்கும் போது, நாம் எவ்வாறு நமது கட்சிக் கீதத்துக்கு மரியாதை செய்வது.

மு.காங்கிரசின் உயர்பீடத்தில் நேர்மையாகப் பேசி, எதையும் சாதிக்கக்கூடிய நிலைமை இல்லை. அப்படி யாராவது பேசி விட்டால் தலைவர் அதை சாணக்கியமாக கையாண்டு, தட்டிக்கழித்து விடுவார். தலைவர் விரும்பாத ஒரு விடயத்தை உயர்பீடத்தில் ஒருவர் பேசினால், தனக்கு சார்பானவர்களைப் பேச வைத்து, சம்பந்தப்பட்டவரை தலைவர் மட்டம் தட்டி விடுவார்.

மு.காங்கிரசின் உயர்பீடத்தில் கேள்விகளுக்கு இடமில்லை. அங்கு கேள்விகள் கேட்க முடியாது. நீண்ட காலமாக, அங்கு நாங்கள் போராடியிருக்கின்றோம். நாம் பேசிய எந்த விடயங்களும் தீர்மானமாக வருவதில்லை. அதனால்தான், வாக்களிக்கும் மக்களிடம் இவற்றையெல்லாம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்தோம்.

இந்தக் கட்சி, அஷ்ரப்புடைய கட்சியாக மாறவேண்டும். எந்தக் கொள்கைகளுடன் அஷ்ரப் இந்தக் கட்சியினைக் கொண்டு வந்தாரோ, அந்தக் கொள்கைகள் இந்தக் கட்சிக்குள் வரவேண்டும். அதனை செயற்படுத்துவதற்காகத்தான் மக்களிடம் நாங்கள் வந்துள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்