கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ்

🕔 February 2, 2017

harees-098– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் –

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட விடயங்களையும், கட்சி விடயங்களையும் தொலைக்காட்சி ஊடகத்திலும், முக நூலிலும் கட்சித் தவிசாளர் தெரிவித்திருக்கின்றமை கவலையளிப்பதுடன், கண்டிக்கத் தக்கதுமாகும் என்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

“ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டிலும், வளர்ச்சியிலும் முக்கிய பங்கெடுத்து பணியாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பிலுள்ள கட்சியின் தவிசாளர், ஊடகங்களில் தோன்றி கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் கருத்துக்களை முன்வைத்திருப்பது கட்சிப் போராளிகளினாலும், ஆதரவாளர்களினாலும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் காலத்திலும் தற்போதைய தலைவர் ரவுப் ஹக்கீம் காலத்திலும் சமூகப்பங்களிப்புடன், எதிர்கால சமூகத்துக்கான வழிகாட்டல்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சியின் பொறுப்புவாய்ந்த தவிசாளர், கட்சியினதும் தலைவரினதும் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் வகையில் பொய்யான கதைகளைப் புனைந்திருப்பது முஸ்லிம் சமூக மட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்குள் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும், தங்களுக்கு நியாயங்கள் நடக்கவில்லையாயினும் கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் தங்களது கருத்துக்களை முன்வைப்பதுதான் பொருத்தமாகும். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அதற்குரிய ஜனநாயகம் காணப்படுகின்றது.

இதையெல்லாம் மறந்துவிட்டு தங்களுடைய செயற்பாடுகளுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற காரணங்களைக் கொண்டு கட்சியையும், கட்சித் தலைவரையும் விமர்சித்து அபாண்டங்களைச் சொல்லி, கட்சியின் எழுச்சியை ஒரு வட்டத்துக்குள் முடக்கும் செயற்பாட்டை எந்த ஒரு போராளியியினாலும் அங்கீகரிக்க முடியாது.

எமது கட்சியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறும் நிலையில், எதிர்கால எழுச்சிக்கான பயணத்துடன் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான கொள்கைப்பிடிப்புடன் போராளிகளான நாம் இந்த சந்தர்ப்பத்தில் சலனம் கொள்ளாது களம் இறங்குவோம். எந்த சக்திகளும் நமது போராடும் கொள்கைப்பிடிப்பை அசைத்துவிட முடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

பேராளர் மாநாடு முடிந்ததும் கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில், நாடு முழுவதும் சென்று கட்சியின்பால் இளைஞர்களை உள்வாங்கி, புதிய எழுச்சியுடன் கட்சியை முன்னெடுப்பதற்கு கட்சிப்போராளிகள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்