மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம்

🕔 January 30, 2017

Hakeem+Basheer - 09556– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தாம் ஆதரவளித்த வேட்பாளர் தரப்பிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தினைப் பெற்றுக் கொண்டதாக, அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்தார்.

இவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தில் தனக்கும் ஒரு கோடி ரூபாயினை ரஊப் ஹக்கீம் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

‘வசந்தம்’ தொலைக்காட்சியின் ‘அதிர்வு’ நிகழ்சியில் கலந்து கொண்டபோது, அவரிடம் கேட்கப்பட்ட வினாவொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே தவிசாளர் பசீர் இவ்விடயத்தினை அம்பலப்படுத்தினார்.

வசந்தம் தொலைக்காட்சியின்உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தினூடாக ஒருவர் கேட்ட கேள்வியொன்றினை, நிகழ்ச்சி நடத்துநர் முன்வைத்தபோதே பசீர் இந்தப் பதிலை வழங்கினார்.

‘எமது தலைவர் ரஊப் ஹக்கீம் 18ஆவது சீர் திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையா? அழ்ழாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள்’ என, பேஸ்புக் ஊடாக, நபரொருவர் கேள்வியொன்றினைப் பதிவு செய்திருந்தார்.

இந்தக் கேள்விக்கு தவிசாளர் பசீர் பதிலளிக்கையில்;

“அழ்ழாஹ்வின் மீது ஆணையாக 18 ஆவது சீர் திருத்தத்துக்கு, தலைவர் ரஊப் ஹக்கீம் பணம் பெறவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, செலவுக்காக என்று பணம் பெற்றார். அதில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். எனக்கும் ஒரு கோடி ரூபாய் தந்தார். அழ்ழாஹ் மீது ஆணை” என்று பசீர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் மக்கள் மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த பின்னர், தபால்மூல வாக்களிப்புகளும் நடந்து முடிந்த பிறகே, அப்போதைய வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மு.கா. ஆதரவளிப்பதாக ரஊப் ஹக்கீம் அறிவித்திருந்தார்.

இவ்வாறாதொரு நிலையில், மைத்திரிக்கு மு.கா. வழங்கிய ஆதரவின் பொருட்டு, பல கோடி ரூபாய்களை ஹக்கீம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து, அரசியல் வட்டாரத்தில் பாரிய வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

மேலும், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கெனக் கூறி உருவாக்கப்பட்ட மு.காங்கிரசை வைத்துக் கொண்டு, மு.கா. தலைவர் இவ்வாறு வியாபாரம் செய்து கொண்டிருப்பது தொடர்பில், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்