பொத்தானை: களவுபோகும் நிலம்

🕔 January 7, 2017

article-mtm-087– முகம்மது தம்பி மரைக்கார் –

சிறுபான்மை மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாதல், இலங்கையில் நிலவி வரும் நீண்ட காலப் பிரச்சினையாகும். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலத்தினை அரசாங்கமே கையகப்படுத்திக் கொள்கின்றமை ஆக்கிரமிப்பின் உச்ச கட்டமாகும். யுத்தம் நிலவிய காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினர் நேரடியாக மக்களின் காணிகளைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். வன பாதுகாப்பு மற்றும் தொல்லியல் திணைக்களங்களும் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றன. அரசாங்கத்துக்குச் சொந்தமான வனப்பகுதி என்று கூறியும், தொல்பொருட்கள் இருக்கின்றன எனத் தெரிவித்தும், மேற்படி திணைக்களங்கள் பொதுமக்களின் ஏராளமான நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து விட்டன.

நாட்டிலுள்ள தொல்பொருட்கள் நமது தேசத்தினுடைய வரலாற்று அடையாளங்களாகும். அவற்றினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் கிடையாது. தொல்பொருட்களை அழிப்பது நியாயப்படுத்த முடியாத குற்றமாகும். ஆனால், இதனைக் காரணமாகக் கூறிக்கொண்டு, பொதுமக்களின் காணிகளை கண்களை மூடிக்கொண்டு ஆக்கிரமிப்புச் செய்யும் நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்தாலும், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன. அண்மையில், அம்பாறை மாவட்டத்தின் பொத்தானை பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலம் அமைந்திருக்கும் இடமொன்றினை, இவ்வாறு தொல்லியல் திணைக்களத்தினர் ஆக்கிரமிப்புச் செய்துள்ளார்கள். சுமார் 250 வருடங்களாக அங்கு அமைந்துள்ள மதப் பெரியார் ஒருவரின் அடக்கஸ்தலமும், அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிவாசலும், இப்போது தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

பொத்தானை எனும் பகுதி திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. அங்கு 02 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான நெற் காணிகள் உள்ளன. அதிகமான காணிகள் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமானவையாகும். நெற் காணிகள் அமைந்துள்ள பகுதியில் அடக்கஸ்தலமொன்று உள்ளது. இஸ்லாமியப் பெரியார் ஒருவர் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். கிட்டத்தட்ட 250 வருடங்களாக அந்த அடக்கத்தலம் அங்குள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை அக்கரைப்பற்றினைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் பராமரித்து வருகின்றனர். மேலும், அந்த இடத்தில் அடிக்கடி மத நிகழ்வுகளை நடத்துவதோடு, ‘கந்தூரி’ எனப்படும் சோறு சமைத்து அன்னதானம் வழங்கியும் வருகின்றனர். அந்த அடக்கஸ்தலத்துக்கு அருகில் பலகை மற்றும் தகரங்களால் பள்ளிவாசல் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வருவோர் பள்ளியில் தொழுது விட்டுச் செல்கின்றனர்.

இப்படி பல நூற்றாண்டுகளாக எந்த விதப் பிரச்சினைகளுமில்லாமல் இருந்து வந்த இடத்துக்கு, கடந்த டிசம்பர் மாதம் 07ஆம் திகதி தொல்லியல் திணைக்களத்தினர் வந்தனர். அந்தப் பகுதியில் தொல்பொருட்கள் உள்ளன என்று கூறியிருக்கின்றனர். அதனையடுத்து, குறித்த அடக்கஸ்தலம் மற்றும் பள்ளிவாசல் உள்ளடங்கலான இடங்களைச் சுற்றி அடையாளமிடும் வகையில், தொல்பொருள் திணைக்களத்தினரின் பெயர் பதிக்கப்பட்ட கற்களை நட்டுள்ளனர். மேலும், அடையாளமிடப்பட்ட இடம், தடைசெய்யப்பட்ட பகுதியென அறிவிக்கும் பதாகையொன்றினையும் அங்கு தொல்லியல் திணைக்களத்தினர் நட்டு வைத்துச் சென்றுள்ளனர்.

பொத்தானையிலுள்ள மதப் பெரியாரின் அடக்கஸ்தலத்தினைப் பராமரிக்கும் பொறுப்பினை அவ்வப்போது நபரொருவர் அல்லது குழுவினர் பாரமெடுத்து மேற்கொண்டு வருகின்றனர். இப்போது அந்தப் பணியினை குழுவொன்று மேற்கொள்கிறது. அந்தக் குழுவுக்கு அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எம். ஜுனைதீன் என்பவர் தலைவராக உள்ளார். ஜுனைதீன் மற்றும் சிலரின் வழிகாட்டலுடன்தான் பொத்தானைக்கு நாம் சென்றோம். அங்கு வைத்து நம்முடன் பேசிய ஜுனைதீன் ஒரு கட்டத்தில் அழுதார். ஆண்டாண்டு காலமாக உணர்வுபூர்வமாய் அவர்கள் மேற்கொண்டு வரும் சமய நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அவர் மிகக் கடுமையான விசனங்களைத் தெரிவித்தார். ‘இந்த இடம், நூற்றாண்டுகளாக எங்கள் வசம் இருந்து வருகிறது. இந்த இடத்தில் நேர்ச்சை செய்தால் அவை பலிக்கும் என்கிற நம்பிக்கையும் எம்மிடமுள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து, இந்த இடத்தில் ‘நிய்யத்து’ (பசுப்பாலும், அரசி மற்றும் சீனி உள்ளிட்டவை சேர்த்து சமைக்கப்படும் ஒருவகை உணவு) ஆக்கி, சந்தோசமாகப் பகிர்ந்து உண்டு, பிரார்த்தனை செய்தோம். ஆனால், அதே நபரின் ஆட்சியில் எங்கள் புனிதமான இடம் இப்படி ஆக்கிரமிக்கப்படுகின்றமையினை நினைக்கையில் ஆத்திரமும், கவலையும் ஏற்படுகிறது. 250 வருடங்களாக யாரின் கண்களுக்கும் தெரியாத தொல்பொருட்கள், இவர்களுக்கு இப்போது எப்படித் தெரிந்தது. இது ஒருவகையான நில ஆக்கிரமிப்பாகும். இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்தி, இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையினை நீக்கித் தரவேண்டும்’ என்று, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஜுனைதீன் பேசினார்.

அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க கடந்த வெள்ளிக்கிழமை ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றினை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறியிருந்த சில விடயங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். இலங்கையில் சுமார் 03 லட்சம் தொல்பொருள் இடங்கள் உள்ளன. அவற்றில் 12 ஆயிரம் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னதாக, ஜனாதிபதியை பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சந்தித்தபோது, நாட்டிலுள்ள தொல்பொருட்களை முஸ்லிம்கள் அழித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு தொல்பொருட்களை அழிக்குமாறு இஸ்லாமிய மதத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியிடம் ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான விடயங்களுடன், பொத்தானையில் தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையினையும் பொருத்திப் பார்க்கும் போதுளூ ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் சிறுபான்மை மக்களிடையே எழுந்துள்ளது.

‘பொத்தானை பகுதியில் அமைந்துள்ள அடக்கஸ்தலத்துக்கு அருகில் இரண்டு பாரிய கற்கள் வைக்கப்பட்டுள்ள. அந்தக் கற்களை அடிப்படையாக வைத்துத்தான், அங்கு தொல்பொருட்கள் இருக்கின்றன என்று, தொல்லியல் திணைக்களத்தினர் கூறுகின்றனர். சரியாகச் சொன்னால், இந்தக் கற்கள் இங்கு ஏற்கனவே இருக்கவில்லை. யுத்தம் நிலவிய காலத்தில் இங்கு மக்கள் வரவில்லை. அதன்போதுதான் இந்தக் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு அரணை அமைப்பதற்காக இந்தக் கற்களை யாரோ ஒரு தரப்பினர் கொண்டு வரப்பட்டிருக்கக் கூடும.; அவ்வாறு இங்கு கொண்டுவரப்பட்டுக் கிடந்த கற்களை, பின்னர் அடக்கஸ்தலத்தின் அருகில் இங்குள் மக்கள் நட்டு வைத்திருக்கின்றார்கள்’ என்று, பொத்தானையிலுள்ள அடக்கஸ்தலத்துடன் தொடர்புபட்ட நபரொருவர் தெரிவித்தார்

பொத்தானையில் பல ஏக்கர் காணி, தற்போது தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள்தான் அடக்கஸ்தலமும், பள்ளிவாசலும் உள்ளடங்குகின்றன. தொல்லியல் திணைக்களத்தினர் அடையாளமிட்டுள்ள நிலப் பகுதியில், முகம்மட் சாலி ஆதம்லெப்பை என்கிற – தனி நபரொருவரின் நெற் காணியின் ஒரு பகுதியும் அகப்பட்டு விட்டது. ஆதம்லெப்பை என்பவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். அவருக்கு 78 வயதாகிறது. தற்போது தொல்லியல் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ள பகுதியின் வரலாறு தொடர்பில் அதிகம் தெரிந்து வைத்துள்ள மூத்த பிரஜைகளில் ஆதம்லெப்பை குறிப்பிடத்தக்கவர். அவரை நாம் சந்தித்தோம்.

‘என்னுடைய வாப்பாவின் மாமா முறையான ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் ஆராய்ச்சி மரைக்கார். அவர் பொத்தானைப் பிரதேசத்தில் காடு வெட்டி காணிகளை உண்டாக்கினார். இதன்போதுதான், அங்கு ஓர் அடக்கஸ்தலம் அமைந்திருப்பதை அவர் கண்டிருக்கிறார். அன்றிலிருந்து இன்றுவரை அந்த அடக்கஸ்தலத்தை கண்ணியமான ஒன்றாகக் கருதி நாம் பராமரித்து வருகின்றோம். அந்த இடத்தில் இஸ்லாமிய பெரியார் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 250 வருடங்களுக்கும் மேலாக அங்கு அந்த அடக்கஸ்தலம் உள்ளது. குறித்த அடக்கஸ்தலம் அமையப் பெற்றிருக்கும் இடத்தை – இப்போதும், ‘ஆராய்ச்சி மரைக்காரின் புட்டி’ என்றுதான் சொல்வார்கள்’ என்று ஆதம்லெப்பை விபரித்தார்.

பொத்தானைப் பிரதேசத்தில் பல ஏக்கர் நெற்காணிகள் ஆதம்லெப்பைக்கு உள்ளன. அங்கு சிறிய வயதிலிருந்து ஆதம்லெப்பை சென்று வந்திருக்கிறார். அதனால், அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளின் சாட்சியாக அவர் இருக்கின்றார். ‘பொத்தானையிலுள்ள அடக்கஸ்தலத்துக்கு அருகாமையில் ஒரு பள்ளிவாசலை அமைத்துள்ளோம். அந்தப் பகுதியில் விவசாயம் செய்வோர், அங்கு வந்து தொழுவார்கள். அங்கு அமைந்துள்ள மதப் பெரியாரின் அடக்கஸ்தலத்துக்கு வந்து, பிராத்தனைகளில் ஈடுபட்டால் அவை பலிக்கும் என்கிற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதனால், மழையில்லாத காலங்களில் அந்த இடத்தில் ‘நிய்யத்து’ ஆக்கி, மக்களுக்கு உண்ணக் கொடுத்த பிறகு, அந்த இடத்தில் வைத்து மழை வேண்டி பிரார்த்திப்போம். அவ்வாறானதொரு இடத்தினை இவ்வாறு ஆக்கிரமிப்புச் செய்துள்ளமை நியாயமாகாது’ என்று ஆதம்லெப்பை ஆதங்கப்பட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு பல இடங்களில் நில ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் – தொல் பொருட்கள் புதைக்கப்பட்டு, பின்னர் அவற்றினை கண்டு பிடிக்கும் நாடகங்களும் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு தொல்பொருட்களைக் களவாகக் கொண்டு வந்து வைத்து விட்டு, பின்னர் அந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் முயற்சிகள் பல தடவை இடம்பெற்றிருக்கின்றன என்று கூறப்படுகிறது. தொல்லியல் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களங்கள் என்றால், அரசாங்கத்தின் சார்பில் நில ஆக்கிரமிப்புச் செய்பவர்கள் என்கிற எண்ணம் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்படுமளவுக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நிலைமை எல்லை மீறியுள்ளன.

பொத்தானை விவகாரம் தொடர்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை எதுவித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இருவர் பிரதியமைச்சர்கள். ஆனால், இந்த மூவரில் ஒருவர் கூட, பொத்தானையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிக்கு வந்து, என்ன நடந்துள்ளது என்பதை எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று, அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு இதை விடவும் முக்கிய கடமைகள் எதுவும் இருக்க முடியாது. தங்கள் சமூகத்தைச் சார்ந்த மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படும் போது, அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் திராணியற்றவர்களாக, அம்பாறை மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளமை வெட்கக் கேடானதாகும் என்று, பொத்தானை விடயம் தொடர்பில் நம்முடன் பேசிய, சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.

தேசிய மட்டத்தில் நடக்கின்ற நிகழ்வுகளையும், அரசியல் போகிற போக்கினையும் காணும் போது, பொத்தானையுடன் இந்த விவகாரம் முடிவடையப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு சமூகத்தின் தேசிய இனத்துவத்தினை மறுப்பதற்கு, அந்த சமூகத்தினை நிலங்கள் அற்றவர்களாக மாற்றுவது ஒரு வகைத் தந்திரோபாயமாகும்.

அதுதான் இப்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

நன்றி: தமிழ் மிரர் (06 ஜனவரி 2017)potthanai-088 potthanai-077 potthanai-066 potthanai-044 potthanai-033 potthanai-022 potthanai-099 potthanai-055 potthanai-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்