சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன்

🕔 December 28, 2016

Rishad - 075– சுஐப் எம் காசிம் –

“ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சிங்களமுஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி, தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு இனவாதிகளின் இலக்காகும்” என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் அல் அஸ்ரபியா அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்று உரைற்றியபோதே, அமைச்சர் மேற்கண்டவாற கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது;

“இன ஐக்கியத்தை சீர்குலைப்பதில் ஈடுபட்டுள்ள போலியான முகநூல்கள் தமது செயற்பாட்டை வேகமாக மேற்கொண்டு வருகின்றன. சில சமூகவலைத்தளங்கள் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையை பொறுக்க மாட்டாத நமது சமூக இளைஞர்களில் ஒருசிலர் பதிலுக்கு பௌத்தர்களை சீண்டுவதையும் அவதானிக்க முடிகின்றது. இது மிகவும் ஆபத்தான விடயமாகும். இனவாதிகளின் எண்ணங்களுக்கு நாம் தீனி போடக் கூடாது. அவர்களது சதிமுயற்சிகள் வெற்றிபெற இடமளிக்க வேண்டாமென நான் கோருகிறேன்.

உலமாக்கள் வெறுமனே மார்க்கக் கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிடாது, சமூகத்தை நேர்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பையும் ஏற்க வேண்டும். அவர்களுக்கு அந்தக்கடமை உள்ளது.

உலமாக்களுக்கு மிம்பர் (மார்க்கப் பிரசார மேடை) ஒரு சிறந்த ஊடகமாகும். அதனை உலமாக்கள் உச்சளவில் பயன்படுத்த முடியும். இறைவன் அந்தப்பாக்கியத்தை உலமாக்களுக்கு வழங்கியிருக்கின்றான். மிம்பரில் நின்றுகொண்டு உலமாக்கள் பிரசாரம் மேற்கொள்ளும் போது அதனை எவரும் தட்டிக் கேட்பதுமில்லை, இடைமறிப்பதுமில்லை. உலமாக்கள் கூறும் கருத்துக்களை செவிமெடுக்கும் பக்குவத்தை இஸ்லாம் நமக்குக் கற்றுத்தந்துள்ளது.

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் பெரும்பான்மைச் சிங்களவர்களுடனும், கத்தோலிக்க மற்றும் இந்து மக்களுடன் எவ்வாறு புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் வாழவேண்டு என்பதை, உலமாக்கள் நமது சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மௌலவிப் பட்டங்களுடனும், ஆலிம் பட்டங்களுடனும் உங்கள் கல்வியை மட்டுப்படுத்திக் கொள்ளாது, பிற மொழிகளிலும் தேர்ச்சி பெறுவதற்கு உங்களைத் தயார்படுத்த வேண்டும். குறிப்பாக சிங்கள, ஆங்கில மொழிகளில் நீங்கள் பாண்டித்தியம் பெற்றால் இஸ்லாத்தைப் பற்றிய, முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய தப்பான எண்ணங்களையும், போலியான பிரசாரங்களையும் முறியடிக்க முடியும்.

தகவல் தொழிநுட்பத்திலும் உலமாக்கள் ஆர்வம் காட்டுவன் மூலமே நமக்கெதிரான சதிகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க முடியும். பிற சமயத்தவருக்கு நமது சமூகம் தொடர்பான யதார்த்த நிலையை,  இஸ்லாமிய விளக்கங்கள் மூலம், வழங்குவதனால் தெளிவு ஏற்படுமென நம்புகின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்