தலைப்புச் செய்திகள்

வடக்கு முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டினை மறுக்கிறார் விக்னேஸ்வரன்

vikneshwaran-011– பாறுக் ஷிஹான் –

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் காணி வழங்கலிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக வௌியான குற்றச்சாட்டுக்கள், அடிப்படையற்றவை என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பினூடாக இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்வின்போது 21 ஆயிரத்து 668 முஸ்லீம்களே இடம்பெயர்ந்திருந்ததாகவும் ,எனினும் 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்வரை வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக 26ஆயிரத்து 841 முஸ்லீம்கள் மீள் குடியேற்றத்துக்கு விண்ணப்பித்தனர் என்றும், அவற்றில் 24 ஆயிரத்து 40 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுவிட்டதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், இரண்டாயிரத்து 801 பேர் மட்டுமே இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் மேற்படி செய்திக் குறிப்பில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீள்குடியேற்றத்தின் போது மொத்தமாக 04 ஆயிரத்து 307  பேர் காணிகளைப் பெற்றுக் கொண்டதாகவும், அவர்களில் 03 ஆயிரத்து 145  பேர் ( 73.02 வீதமானோர்) முஸ்லிம்கள் எனவும் முதலமைச்சரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி செய்திக் குறிப்பு, முதலமைச்சரின் ஊடகப்பிரிவினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும், வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் பாரபட்சமாக நடந்துள்ளார் என்று, கடந்த மாகாண சபை அமர்வுகளில் ஆளுங்கட்சி உறுப்பினரான அய்யூப் அஸ்மீன் நேரடியாக சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்கட்சி உறுப்பினரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜனூபர் ஊடகங்கள் வாயிலாகவும் இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.