‘தேசியப்பட்டியல்’ கிடைத்தால் பெற்றுக்கொள்வேன்; புத்தளம் பாயிஸ் தடாலடி: அட்டாளைச்சேனை பற்றி பேச்சில்லை

🕔 November 27, 2016

baize-022– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை தனக்கு வழங்கினால், அதனை பெற்றுக் கொள்வேன் என்று, முன்னாள் பிரதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரசில் அண்மையில் மீளவும் இணைந்து கொண்டவருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

வசந்தம் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ‘அதிர்வு’  அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கலந்து கொண்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

“முஸ்லிம் காங்கிரசின் தலைவர், ஏற்கனவே அட்டாளைச்சேனை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த நிலையில் உங்களுக்கும் அந்தக் கட்சியின் வழியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. எனவே, அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தட்டிப் பறிக்க மாட்டேன் என்கிற வாக்குறுதியை இந்த இடத்தில் வழங்குவீர்களா” எனும் கேள்வியொன்றினை ‘அதிர்வு’ நிகழ்ச்சி நடத்துநர், புத்தளம் பாயிசிடம் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த பாயிஸ்; “தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.காங்கிரசின் தலைவர் எனக்கு வழங்கினால், அதனை நான் பெற்றுக் கொள்வேன்” என்றார்.

அதாவது, அட்டாளைச்சேனைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, தட்டிப் பறிக்க மாட்டேன், குறித்த பதவியை அந்தப் பிரதேசம் பெறுவதற்கு தடையாக இருக்க மாட்டேன் என, வாக்குறுதியொன்றினை வழங்குமாறு புத்தளம் பாயிசிடம் ‘அதிர்வு’ நிகழ்ச்சி நடத்துநர் கேட்டபோதும், அது குறித்து பாயிஸ் பேசவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரசின் முன்னாள் தேசிய அமைப்பாளரான புத்தளம் பாயிஸ், அந்தக் கட்சியிலிருந்து விலகி, பிரதியமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை அரசாங்கத்தில் வகித்து விட்டு, தற்போது அரசியல் பதவிகள் எவையும் அற்ற நிலையில், முஸ்லிம் காங்கிரசில் இணைந்துள்ளார்.

இவ்வாறு இவர் மு.கா.வில் மீளவும் இணையும் போது – எந்தவித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று கூறப்பட்டபோதிலும், முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பாயிசுக்கு வழங்குவதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் உறுதியளித்திருந்தார் என்று, அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையிலேயே, “தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. தலைவர் வழங்கினால் பெற்றுக்கொள்வேன்” என்று பாயில் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி
baize-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்