அடக்க முடியாத பூதம்

🕔 November 23, 2016

article-mtm-011– முகம்மது தம்பி மரைக்கார் –

பெஷன் பக் தலைமையகம் கடந்த சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்திருக்கிறது. ‘சிங்களவர்கள் அந்த நிறுவனத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது’ என்று, ஞானசார தேரர் தலைமையிலான கண்டி ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரம் பகிரப்பட்டு, சில மணி நேரத்தில், இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. பௌத்த சமய ஊர்வலம் எனும் பெயரில் சிங்களக் கடும்போக்காளர்கள் கடந்த சனிக்கிழமை கண்டியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரானதாகவே இருந்தது. குறிப்பாக, அந்த ஊர்வலம் முஸ்லிம்கள் மீது அதிகம் குரோதத்தினைக் கொட்டித் தீர்த்தது. இப்படித்தான் அந்த ஊர்வலம் நடந்து முடியும் என்று – ஏற்கனவே பலரும் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொஞ்சக் காலம் சோர்ந்துபோய்க் கிடந்த காவிப் பேரினவாதிகள், இப்போது பழைய ஆவேசத்துடன் களமிறங்கியுள்ளார்கள். மஹிந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களை மட்டுமே குறி வைத்துத் தாக்கியவர்கள், நல்லாட்சியில் தமிழர்களையும் தங்கள் இலக்கில் சேர்த்திருக்கிறார்கள். அண்மைக்காலமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிர்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் – கண்டியில் ஞானசார தேரர் தலைமையிலான ஊர்வலத்தில் கைகோர்த்திருந்தமை கவனத்துக்குரியது.

காவிப் பேரினவாதம்

நல்லாட்சியாளர்களும் காவிப் பேரினவாதிகளைப் பகைத்துக் கொள்ளத் தயங்குகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் நடத்தைகளும் பேச்சுக்களும் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கேவலமாகப் பேசி வீடியோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டதோடு, அச்சுறுத்தல்களையும் விடுத்து வந்த – டான் பிரியசாத் என்கிற நபருக்கு எதிராக, முஸ்லிம் தரப்பிலிருந்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டுக்கிணங்க குறித்த நபரை கைது செய்த பொலிஸார், மறுநாள் – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசிக் என்பவரையும் கைது செய்தார்கள். மாற்று மதத்தினை இழிவுபடுத்திப் பேசினார் என்பது, தவ்ஹீத் ஜமாத் செயலாளர் மீதான குறச்சாட்டாகும். டான் பிரியசாத் கைது காரணமாக, காவிப் பேரினவாதிகளிடையே ஏற்பட்ட கொதிநிலையைத் தணிப்பதற்காகவே, தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் கைது செய்யப்பட்டார் என்கிற விமர்சனம் தட்டிக்கழிக்க முடியாதது.

கடந்த 03 ஆம் திகதி கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதைக் கண்டித்து அந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையினை மேற்கு நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக, முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் கை வைக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் கோசமிடப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டப் பேரணியினை ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு முன்னதாக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அதுபற்றிப் பேசியிருந்தார். தவ்ஹித் ஜமாத்தினரின் மேற்படி ஆர்பாட்டம் நடைபெற்றால், அதில் ஈடுபடுகின்றவர்களை விரட்டியடிப்போம் – உயிருடன் கொழுத்துவோம் என்று அவர் தெரிவித்திருந்தார். ஞானசார தேரர் இவ்வாறு கூறியமையினைக் கண்டித்து, ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றபோது, தவ்ஹித் ஜமாத் செயலாளர் உரையாற்றினார். இதுவே அவர் கைதாவதற்குக் காரணமாக அமைந்தது.

விவேகமற்ற வேகம்

இலங்கையில் தவ்ஹித் ஜமாத்தினரின் எழுச்சிக்குப் பின்னர், முஸ்லிம் சமூகத்தினுள் சமயத்தின் பெயரால் பிளவுகளும், வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றமை – ஒளித்து மறைக்க முடியாத உண்மையாகும். தவ்ஹித் ஜமாத்தினரின் சில செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை. சமூகத்தில் சில நல்ல விடயங்களைச் செய்து காட்டியிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மிகவும் கடினமாக நடந்துகொள்கின்றனர். சமய விவகாரங்களை முன்னிறுத்தி முஸ்லிம் சகோதரர்களுடன் முட்டி மோதி ரத்தம் கண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் வரை இந்த விவகாரங்கள் சென்றுள்ளன. தவ்ஹித் ஜமாத்தினரின் இந்த வன்போக்கினால், அவர்களின் நல்ல விடயங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு சமூகத்திலுள்ளவர்கள் தயங்குகின்றார்கள். தவ்ஹித் ஜமாத்திடம் வேகம் இருக்குமளவுக்கு விவேகம் இல்லை என்கிற விமர்சனமும் உள்ளது. அதில் உண்மைகளும் இல்லாமலில்லை.

மாடறுப்புக்கு எதிராக காவிப் பேரினவாதிகள் நீண்டகாலமாகப் பேசிவருகின்றார்கள். முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பது, காவிப் பேரினவாதிகளுக்கு உறுத்தலான விடயமாகும். அதனால், அவர்கள் பல தடவை முஸ்லிம்களின் மாட்டிறைச்சிக் கடைகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருந்தார்கள். அறுப்பதற்காக முஸ்லிம்கள் கொண்டுவந்த மாடுகளை பறித்தெடுத்ததுடன், அதனைக் கொண்டு வந்தவர்களையும் தாக்கினார்கள். காவிப் பேரினவாதிகளின் இந்த செயற்பாடுகள் முஸ்லிம்களிடையே பாரிய ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆயினும், அந்த விவகாரத்தினை மிகவும் பொறுமையுடனும் புத்திசாதுரியத்துடனும் கையாள வேண்டும் என்பதில் முஸ்லிம் தரப்புகள் கவனமாக இருந்தன. இந்த நிலையில், தவ்ஹித் ஜமாத்தினர் குட்டையைக் குழப்புவது போல் நடந்து கொண்டனர். ‘முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பதைக் கண்டிக்கும் பௌத்தர்களே, நீங்கள் பின்பற்றுகின்ற புத்தர் – மனித இறைச்சியினையே சாப்பிட்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா’ என்று தௌஹித் ஜமாத்தினர் கேட்டார்கள். அதற்கு ஆதாரம் என்கிற கோதாவில், இன்னும் பல விடயங்களையும் கூறினார்கள். போதாக்குறைக்குறைக்கு, அதனை சீ.டி.களாகவும் வெளியிட்டார்கள். தவ்ஹித் ஜமாத்தினரின் இந்தப் பக்குவமற்ற செயற்பாடானது, பொதுபலசேனா அமைப்பினருக்கு வாசியானது. ‘புத்தர் மனித இறைச்சி சாப்பிட்டதாக சோனகன் சொல்கிறான்’ என்று கூறி, சாதாரண பௌத்த மக்களையும், பொதுபலசேனா உசுப்பேற்றியது. ஞானசாரர் போன்றோரின் முஸ்லிம் விரோதப் பிரசாரத்துக்கு, ‘புத்தர் மனித மாமிசம் சாப்பிட்ட கதை’ நன்றாக உதவியது. இதன் பிறகுதான், தமது புத்திசாதுரியமற்ற செயற்பாட்டின் பாரதூரத்தினை தவ்ஹித் ஜமாத்தினர் புரிந்து கொண்டார்கள். அதனால், தமது முன்னைய கூற்றுக்கு வருத்தம் தெரிவித்து, அவர்கள் ஓர் அறிக்கையினை வெளியிட்டார்கள். ஆனால், பௌத்த மக்களிடம் அது பெரிதாகப் போய் சேரவில்லை.

இலங்கையில் முஸ்லிம் கடும்போக்கு அமைப்பு என்கிற முத்திரை தவ்ஹித் ஜமாத் மீது குத்தப்படுவதற்கு இவை மிக முக்கிய காரணங்களாகும். அத்துடன், சில முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சமய ரீதியான கொள்கைகளுடன் தவ்ஹித் ஜமாத்தினர் முரண்பாடுடையவர்களாக உள்ளனர். அவர்கள் மீதான அதீத பழிச்சொல்லுக்கு, இந்த நிலையானது – இன்னொரு காரணமாக அமைந்து விட்டது.

எவ்வாறாயினும், தவ்ஹித் ஜமாத் அமைப்பு – முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதத்தினைப் போதித்து வருகிறது, அவர்களின் மதரசாக்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு தீவிரவாதப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றெல்லாம் ஞானசார தேரரும், அவரின் கூட்டத்தாரும் கூறுவதில் எந்தவித உண்மைகளுமில்லை.

வாய் வழிக் கதை

இவ்வாறானதொரு நிலையில், நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்த சில தகவல்கள் காவிப் பேரினவாதிகளுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் 32 பேர் ஐ.எஸ். எனப்படும் சர்வதேச பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர் என்று – அவர் ஒரு தகவலை வெளியிட்டார். மேலும், இலங்கையிலுள்ள இஸ்லாமிய மதரஸாக்களில், வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வீசாவில் வருகின்றவர்கள் தீவிரவாதத்தினைப் போதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருந்தார். பேருவளை, கல்முனை, குருணாகல் மற்றும் கல்எலிய போன்ற பகுதிகளிலுள்ள மதரஸாக்களிலேயே இவ்வாறு நடைபெறுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம்கள் மீது கூறிவரும் அதே குற்றச்சாட்டுக்களையே, நீதியமைச்சரும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. நீதியமைச்சர் தெரிவித்த தகவல்களுக்கான தரவுகளை எப்படி, எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்பது இங்கு முக்கியமானது. வெறும் வாய்வழிக் கதைகளையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் நாடாளுமன்றில் அமைச்சர் ஒருவர் வெளியிட முடியாது. அது பொறுப்புடைய செயலுமல்ல. அவ்வாறு செய்வது பாரதூரமானதொரு தவறாகும். அதுவும், முஸ்லிம்கள் குறித்தும் இஸ்லாமிய மதம் தொடர்பிலும் காவிப் பேரினவாதிகள் மிக மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற சூழலில், நீதியமைச்சரின் மேற்படி கூற்று காலப்பொருத்தமற்றதாகவும் பாரக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து சுற்றுலா வீசாவில் வருகின்ற சிலர், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புடவை வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள். இவர்களை அடிக்கடி பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துவார்கள். புடவை வியாபாரிகள் தொடர்பிலேயே நிலைமை இப்படியிருக்க, வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்கள் தீவிரவாதத்தினைப் போதிக்கின்றார்கள் என்று தெரிந்திருந்தும், அதுவும் எந்தெந்தப் பிரதேசங்களிலுள்ள மதரஸாக்களிலெல்லாம் அப்படி நடக்கிறது என்பதை அறிந்திருந்தும், அரசாங்கம் அவற்றுக்கு எதிராக – எதுவும் செய்யாமலிருப்பது ஆச்சரியமாகும். சுற்றுலா வீசாவில் வருகின்ற ஒருவர் – நாட்டிலுள்ள மதரஸாவில் தீவிரவாதத்தினைப் போதிக்கின்றார் என்பது பாரதூரமாதொரு குற்றமாகும். அவ்வாறான நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவது பொலிஸாரின் கடமையாகும். அதை விடுத்து, நாடாளுமன்றில் கதை சொல்லிக் கொண்டிருப்பது நீதியமைச்சருக்கு கௌரவமாகாது.

காவிப் பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் எத்தனம், நீதியமைச்சரின் தகவல்களில் இருந்தது. ‘நீங்கள் இப்படியெல்லாம் தவறு செய்வதால்தான், பௌத்தர்கள் உங்கள் மீது கோபப்படுகிறார்கள்’ என்று, முஸ்லிம்களை நோக்கி – நீதியமைச்சர் சொல்லாமல் சொன்ன தருணமே அவரின் உரையாகும். நீதியமைச்சரின் இந்த உரையினை பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் தொடர்பில் தாங்கள் நான்கு வருடங்களாகக் கூறிவருகின்ற விடயம், இப்போதுதான் அரசாங்கத்தின் கண்களுக்குத் தெரிந்துள்ளதாகவும் டிலந்த இதன்போது கூறியுள்ளார்.

கசப்பை வளர்த்தல்

இதேவேளை, முஸ்லிம்களிடையே சிங்களப் பேரினவாதிகள் பற்றிய ஒரு அச்சநிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. எப்போது என்ன நடக்குமோ என்கிற பதட்டம் சிங்களப் பிரதேசங்களை அண்டிவாழும் முஸ்லிம்களிடையே உருவாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் நிலைமை இவ்வாறுதான் இருந்தது. சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், காவிப் பேரினவாதம் என்பது – அடக்கமுடியாத ஒரு பூதம் போலவே உள்ளது. ஆட்சியாளர்களால் தங்களை அடக்க முடியாது என்பதை, பூதங்களும் அறிந்து வைத்துள்ளன. அவற்றின் ஆட்டத்துக்கு அதுவே மிக முக்கிய காரணமாகும்.

ஞானசார தேரரும், அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவர்களைப் போன்றோரும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே மிகமோசமான கசப்புணர்வுகளை விதைத்து வருகின்றார்கள் என்பதை சிங்கள சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். சிங்களவர்களுடன் சேர்ந்து வாழவே முடியாது என்கிற மனப்பதிவினை இந்த ஆ’சாமி’கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூகங்களிடையே இரும்புச் சுவர்களை இவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேளம்

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக இப்போது களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் காவிப் பேரினவாதிகளின் ஆட்டத்துக்கு, சில அரசியல் கரங்கள் மேளமடித்துக் கொண்டிருக்கின்றமை குறித்தும் கதைகள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தக் காவிப் பேரினவாதத்தின் பின்னால் உள்ளார் என்கிற குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் பொறுப்பிலுள்ள மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது நினைவுகொள்ளத்தக்கது. மஹிந்தவினுடைய ஆட்சிக் காலத்தில் அவருடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ – பொதுபலசேன அமைப்பினை உருவாக்கினார் என்று, ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இருந்தபோதும், நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் அண்மையை நாடாளுமன்ற உரையினைக் கேட்டபோது, காவிப் பேரினவாதத்துக்கு மேளடிக்கும் கரங்கள், ஆளுந்தரப்பிலும் உள்ளமையினைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னொரு புறம், காவிப் பேரினவாதிகளின் இவ்வாறான தொடர் அட்டகாசங்களினால், பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீதான சிறுபான்மை மக்களின் எதிர்ப்புணர்வுகள் மழுங்கடிக்கப்படும் நிலைவரமொன்று உருவாகியுள்ளமையும் இங்கு பதிவுசெய்யத்தக்கது. இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராக எழுந்த சிறுபான்மை சமூகத்தின் குரல்கள் இப்போது ஒலிக்கவில்லை என்பதும், அவர்களின் கவனம் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள காவிப் பேரினவாத செயற்பாடுகள் மீது திருப்பப்பட்டுள்ளமையும் கவனிப்புக்குரியதாகும்.

யுத்தம் – சமூகங்களுக்குள் ஏற்படுத்திய பிளவுகளை விடவும், காவிப் பேரினவாதிகளின் செயற்பாடுகள் அதிகளவில் ஏற்படுத்தி விடுமோ என்கிற பயம் சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைவரம் ஏற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.

எனவே, பௌத்த பேரினவாதப் பூதத்தை அடக்கும் மந்திரக்கோலினை நல்லாட்சியாளர்கள் உடனடியாகக் கையில் எடுக்க வேண்டும். தங்களுக்கான எதிர்கால வாக்குகள் குறித்து தினமும் மனக்கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் பூதங்களை அடக்க முடியாது.

22 நொவம்பர் 2016 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்