வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம்

🕔 August 17, 2016

Mahroof MP - 0991– எப். முபாரக் –

டக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு போதும் இணையக்கூடாது என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

அவ்வாறு இணைவதை கிழக்கு மாகாண முஸ்லிம், சிங்கள மக்கள் மாத்திரமன்றி, இங்குள்ள தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், இன்று  புதன்கிழமை கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூரா ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறு்பினர் மேலும் தெரிவிக்கையில்;

“புதிதாக உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி வட்டார முறைமை, திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி, தமிழ் மக்களுக்கும் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான பிரநிதிகள் ஒதுக்கீட்டில், சிங்களச் சமூகத்தினுடைய பிரதிநிதிகளை நாங்கள் குறைக்கக் கோரவில்லை. மாறாக தமிழ், முஸ்லிம்களின் இன விகிதாசரத்துக்கேற்ப பிரதிநிதிகள் வழங்கப்பட வேண்டும்.

1963 ஆம் ஆண்டின் வட்டார முறைக்குச் செல்லுவதென்றால், புதிய எல்லை நிர்ணயங்களையும்  புதிய சபைகளையும் உருவாக்கிவிட்டுத்தான் அதற்குச் செல்ல வேண்டும்.

தோப்பூரை ஒரு பிரதேச சபையாகவும் – கட்டைபறிச்சான், சம்பூர், மல்லிகைத் தீவு ஆகிய பிரதேசங்களை இணைத்து ஒரு தமிழ் பிரதேச சபையாகவும், தமிழ், முஸ்லிம்கள் கலந்த ஒரு நகர சபையாக மூதூரையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அங்கு மூன்று புதிய சபைகள் உருவாகுகின்றபோது – தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை இன விகிதாசாரத்துக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியும்.

இதேபோன்று, கிண்ணியாவிலும் – கிண்ணியா நகரசபை என்றும், கச்சக்கொடித்தீவு பிரதேசசபை என்றும். குறிஞ்சாக்கேணி பிரதேசசபை என்றும் – மூன்று உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்படவேண்டும்.

இதில் கிண்ணியா பிரதேசசபையும், கச்சக்கொடித்தீவு பிரதேசசபையும் இணைத்து குறிஞ்சாக்கேணி என்ற பெயரில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோல் புல்மோட்டை மற்றும் தோப்பூருக்கு  தனியான பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

இதன்போது, ‘வடக்கும் கிழக்கும் ஒருபோதும் இணையக்கூடாது. இது சம்மந்தாக பொதுமக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிவில் சமூகமும், அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’ என்ற தீர்மானம்   திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்  சபையில் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்