அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, உள்ளுர் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதில் இழுபறியும், போட்டியும் நிலவிவரும் நிலையில், மக்கள் இந்த நடவடிக்கை குறித்து தமது அதிருப்திகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தாங்கள் செய்யாத, தங்களுக்குச் சொந்தமில்லாத அபிவிருத்தி நடவடிக்கைகளை, தாங்கள் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் பகட்டு அரசியல் – வெட்கக் கேடான விடயம் என்றும் மக்கள் விமர்சிக்கின்றனர்.
இவ்வாறானதொரு நிகழ்வு, அட்டாளைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமையும் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பாலத்தடி வீதி – காபட் வீதியாக நிர்மாணிப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா நேற்று செவ்வாய்கிழமை, அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் இடம்பெற்றது.
இந்த வேலைக்காக 01 கோடி 22 லட்சம் ரூபா நிதியினை, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது. அதனால், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி இந்த நிகழ்வுக்கு வந்து – பணியை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிலையில், இந்த வீதி நிர்மாண வேலையினை தாங்கள் செய்வதாகக் காட்டிக் கொள்வதற்கு மு.காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்தனர். அதற்காக, அவர்கள் தமது கட்சிக் கொடிகளை – நிகழ்வு நடைபெறும் இடங்களிலெல்லாம் கட்டியதோடு, விழாவுக்கு வருமாறு பொதுமக்களை மு.காங்கிரஸ் கட்சிப் பாடல்களை ஒலிபரப்பி அழைத்தார்கள்.
மு.காங்கிரஸ்தான் இந்தப் பணியைச் செய்வது போல் காட்டும் பகட்டு வேலையினை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மு.காங்கிரஸ் அமைப்பாளரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம். நசீர் முன்னின்று செய்தார்.
இதேபோன்று, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பையும் இந்தப் பணி நடப்பதற்கு தான்தான் காரணம் என்பதுபோல் காட்டிக் கொண்டதோடு, அவருடைய ஊடகப் பிரிவினரும் அவ்வாறே பிரசாரம் செய்தனர்.
அட்டாளைச்சேனையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதியுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர், முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேற்படி வீதி நிர்மாணப் பணியினை முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் சொந்தம் கொண்டாட முயற்சிப்பதை அமைச்சர் ஆரியவதி புரிந்து கொண்டார். எனவே, அதற்கும் மு.கா.வுக்கும் தொடர்பில்லை என்பதை தனது உரையில், அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிவிட்டார்.
உதுமாலெப்பையும், நசீரும் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே – தனது அமைச்சினூடாக, தான்தான் இந்தப் பணியைச் செய்வதாகவும், அமைச்சர் ஆரியவதி மக்கள் மத்தியில் கூறி விட்டார்.
அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாட நினைத்த, உள்ளுர் அரசியல்வாதிகளுக்கு அசடு வழியாத குறைதான்.