ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு

🕔 August 8, 2016
Hafis Naseer - 0124– சப்னி அஹமட் –

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள், வயதெல்லையின்றி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரம்பும் பொருட்டு, பட்டதாரிகளிடமிருந்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

இதன்போது விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பல்வேறு தரப்பினரும், விண்ணப்பதாரிகளுக்கான வயதெல்லையை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ் விடயத்தினைக் கவனத்திற்கொண்ட  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைப்பெற்றமையினை அடுத்து,  மேற்படி அறிவித்தலை அவர் இன்று விடுத்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பட்டதாரிகள் பலர் 35 வயதிற்கு மேற்படவர்களாகக் உள்ளனர். இவர்களின் வயதெல்லைக்கு ஏற்றால்போல் விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும். ஏன் என்றால் கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சரியான கல்வி கிடைக்காமை, இருப்பிட வசதி கிடைக்காமை, பாதுகாவலர்களின் இயலாமை, தாய், தந்தை மற்றும் உறவினர்களின் இழப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் இதர காரணங்களால் தமது கல்வியைத் தாமதப் படுத்தியமை காரணமாக, மாணவர்கள் சிலர் – காலம் கடந்து தமது பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.

எனவே, அவர்களின் நலன்கருதி அவர்களைப் புறந்தள்ளி விடாமல் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது, குறிப்பிட்ட மாணவர்களையும் உள்நுளைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் எனும் வையில் நானும்,  மாகாணக் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணியும் விடுத்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் ரணில் விக்ரம சிங்க, ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ மற்றும் மத்திய கல்வி அமைச்சர் அகிலராஜ் காரியவசம் ஆகியோர் சாதகமான பதிலை வழங்கியுள்ளனர்.

ஆகவே கடந்த வாரம் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பம் கோரப்பட்டபோது, குறிப்பிட்ட வயதெல்லையைத் தளர்த்தி – அதில் மாற்றம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்