சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும்

🕔 June 25, 2016

Article - Nifras - 01
கா
லில் ஏற்­பட்ட ஒரு சிறிய காயத்­திற்கு முறை­யாக மருந்து கட்­டாமல், வெறும் வெள்ளைச் சீலையை மட்டும் சுற்றிக் கட்­டி­விட்டு காலத்தை இழுத்­த­டித்து ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயங்கள் சீழ்­பி­டித்து நாற்­ற­மெ­டுக்கத் தொடங்கும் என்­பது நமக்குத் தெரியும். சின்­னஞ்­சிறு காயத்­துக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காததால் நீண்ட காலத்தின் பின்னர் முழு­மை­யாக ஒரு காலினை அகற்றும் நிலை­மைக்கு ஆட்­பட்­ட­வர்­க­ளையும் நாம­றிவோம். முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் தீர்க்கப்படாதிருக்கின்ற ஏகப்­பட்ட முரண்கள் இப்­ப­டி­யான ஒரு இக்­கட்­டான கட்டத்துக்குள் கட்­சியை இன்று கொண்­டு­வந்து நிறுத்­தி­யி­ருக்­கின்­றது எனலாம்.

சாணக்­கியம் என்­பது எப்­போதும் வேலை செய்து கொண்­டி­ருப்­ப­தில்லை. உண்மையான சாணக்­கியம் என்­ன­வென்று சரி­யாக புரிந்து கொள்­ளாமல் எல்லாவற்றையும் கண்­ணை­மூடிக் கொண்டு சாணக்­கியம் என்று சொல்லிக் கொண்டி­ருப்­ப­வர்­களால், அது வேலை செய்­ய­வில்லை என்­பதை புரிந்து கொள்­ளவும் முடி­வ­தில்லை. அண்­மைய நாட்­களில் முஸ்­லிம்­களின் பிர­தான அர­சியல் கட்­சிக்குள் இவ்­வா­றான நிலை­மை­களே அவ­தா­னிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

உள்­ளக முரண்­பா­டுகள், பனிப்­போர்கள், குழி­ப­றிப்­புகள், பதவிப் போட்­டிகள் போன்றவை எல்லாக் கட்­சி­க­ளுக்கும் பொது­வா­ன­வையே. பெருந்­தே­சியக் கட்சிகளிலும் இவ்­வா­றான பார­தூ­ர­மான முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டு­மின்றி ஏனைய முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு மத்­தி­யிலும் ஏகப்பட்ட சிக்­கல்­களும் பதவிப் போட்­டி­களும் இருக்­கவே செய்­கின்­றன. மு.கா.வுக்குள் தலை­வ­ருக்கும் செய­லாளர் மற்றும் தவி­சா­ள­ருக்கும் இடை­யி­லான முரண்கள் வலுவடைந்து கொண்­டி­ருப்­பது போல மக்கள் காங்­கி­ரஸுக்குள்­ளேயும் தலைவர், செய­லாளர் ஆகி­யோரும் சட்­டத்தின் துணை­கொண்டு மல்­லுக்கு நிற்­கின்­றனர். தேசிய காங்­கி­ரஸைப் பொறுத்­த­மட்டில் அத­னது பரம்பல் மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இருப்­ப­தாலும்இ தலை­வரும் செய­லா­ளரும் ஒரு­வரே என்­ப­தாலும் பதவிச் சண்­டைகள் பெரிதாக இல்லை என்றே கூற­வேண்டும்.

தவ­று­களின் வலிமை

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற முரண்­பா­டுகள் மிகவும் பார­தூ­ர­மா­ன­வை­யாகும். இலங்கை வாழ் முஸ்­லிம்­களில் பெரும்பாலானவர்களால் ஆத­ரிக்­கப்­படும் முஸ்லிம் கட்­சி­யாக மு.கா. திகழ்கின்றமையால், அக்­கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சிக்­கல்கள் ஒட்­டு­மொத்த முஸ்லிம் அர­சி­ய­லிலும் ஒரு­வித தேக்க நிலையை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. தமிழர் அர­சி­யலில் தமி­ழ­ரசுக் கட்­சியைப் போல முஸ்லிம் அர­சி­யலில் முஸ்லிம் காங்­கி­ரஸின் வகி­பாகம் முக்­கி­ய­மா­னது. ரா.சம்­பந்­தனைப் போன்ற கொள்கைப் பிடிப்­புள்ள ஒரு ஆளு­மை­யாக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இருக்­கின்­றாரா என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, முஸ்லிம் அர­சி­யலில் ஓர­ள­வுக்கு அந்த இடத்தில் வைத்தே ஹக்கீம் நோக்கப்படுகின்றார் என்று சொல்­லலாம். டக்ளஸ் தேவா­னந்தா செய்­கின்ற தவறுகளைப் போல சம்­பந்தன் பிழை­களை செய்து கொண்­டி­ருக்க முடி­யாது என்­பது போலவே, சிறு முஸ்லிம் கட்­சி­களின் அர­சி­யல்­வா­திகள் செய்­கின்ற தவ­று­களைப் போன்று ஹக்­கீமும் தவ­று­களை இழைத்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் சம்­பந்தன் எவ்­வாறு சந்­தியில் நிறுத்­தப்­பட்டு தமிழ் மக்­களால் கேள்வி எழுப்­பப்­ப­டு­வாரோ, அவ்­வாறே முஸ்­லிம்கள் ஹக்­கீ­மி­டமும் கேள்வி கேட்டு விமர்­சிப்­பதை தவிர்க்க முடி­யாது என்ற யதார்த்­தத்தை கோபப்­ப­டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் எடுக்­கின்ற எல்லா நகர்­வு­களும் பாரிய சவால்­களை சந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. அவ­ரு­டைய பல சாணக்­கிய காய்­ந­கர்த்­தல்கள் சாண் ஏற முழம்­ச­றுக்­கு­வதை பார்க்கும் சிலர் – அவ­ருக்கு இப்­போது கெட்­ட­காலம் என்றும், ஒன்றும் செய்­யாமல் சும்மா இருப்­பதே நல்­லது போல் தெரிகின்றது என்றும் பேசிக் கொள்­கின்­றனர். மேலோட்­ட­மாக பார்க்­கின்­ற­போது இந்த நிலைப்­பாடு சரி­யாக தோன்­றலாம். ஆனால், முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் அடிப்­படை நோக்­கத்­துக்கு மாறாக கட்­சியை வழி­ந­டத்திச் சென்­ற­மையும், கூட்டுத்தீர்மானம் இல்­லாமல் தற்­று­ணிவாக செயற்­பட்­ட­மையும், ஒரு கட்சி என்ற வகையில் மக்­க­ளுக்கு செய்ய வேண்­டி­யதை செய்­யாமல் விட்­ட­துமே இவ்­வா­றான பல சிக்­கல்­களை தோற்­று­வித்­துள்­ளது என்­பதே தர்க்­க­வியல் நீதி­யாகும்.

முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி தவ­றாக செயற்­பட்­டுள்­ளது என்று கூறு­வதைக் காட்­டிலும் மு.கா. தலைவர் தவ­றி­ழைத்­தி­ருக்­கின்றார் என்று கூறு­வோரே அதி­க­மாக உள்­ளனர். எல்லா அதி­கா­ரங்­க­ளையும் ஒரு­மு­கப்­ப­டுத்தி வைத்துக் கொண்டு, கடந்த காலத்தில் அவர் செய்யத் தவ­றிய காரி­யங்கள், சமூக நலனை கருத்­திற்­கொள்­ளாது எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் போன்­ற­வையே அவர் மீதான இவ்­வி­மர்­ச­னங்­க­ளுக்கு அடித்தளமிட்டுள்ளன. இவ்­வாறு இன்று மு.கா. தலைவர் மீது வைக்­கப்­ப­டு­கின்ற எல்லா வகை­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் அவர் மட்­டுமே பொறுப்­பல்ல என்­ப­தையும் இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும். அஷ்­ரஃபின் மர­ணத்­துக்குப் பிறகு ரவூப் ஹக்­கீமை இணைத்­த­லை­வ­ரா­கவும் தனித் தலை­மை­யா­கவும் பிர­க­டனம் செய்­த­வர்கள், கட்சிக்குள் ஜன­நா­யகம் மீறப்­ப­டு­கின்ற போது தமது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டு அதற்கு ஆத­ர­வ­ளித்த தள­ப­திகள், மௌன­மாக இருந்து சம்­மதம் தெரிவித்த உயர்­பீட உறுப்­பி­னர்கள், எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஹக்­கீமில் சரி கண்ட குருட்டு அரசி­யல்­வா­திகள் எல்­லோ­ருக்கும் இதில் பங்­கி­ருக்­கின்­றது.

அது­மட்­டு­மன்றி, மு.கா. தலைவர் தவறு செய்­தி­ருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­மாக இருந்தால், இன்று தலை­வ­ரது போக்கை விமர்­சித்துக் கொண்டு ஒரு சாத்­வீக போராட்­டத்தில் குதித்­தி­ருக்­கின்ற தவி­சா­ள­ருக்கும் செய­லா­ள­ருக்கும் கூட இதில் ஒரு சிறு பங்கிருக்கின்­றது. பசீர் சேகு­தாவூத், ஹசன்­அலி போன்­றரோ் தலைவர் வழி­த­வ­று­கின்ற வேளையில் கட்­சிக்குள் அவ­ரு­டைய மூக்­க­ணாங்­க­யிற்றை இழுத்துப் பிடித்­தார்கள் என்­பது உண்­மையே. ஆயினும், இந்த விவ­கா­ரங்­களை எல்லாம் மக்­கள்­ம­யப்­ப­டுத்தி அதற்­கான தீர்வை காண்­ப­தற்கு செய­லாளர், தவி­சாளர் உள்­ள­டங்­க­லாக மேற்­சொன்ன எந்த தரப்­பி­னரும் அப்­போது முன்­னிற்­க­வில்லை என்ற கார­ணத்­தி­னா­லேயே மு.கா. தலைவர் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­ப­டு­வ­தற்­கான தைரி­யத்தை பெற்றிருக்கின்றார். ஆகவே, அதி­கா­ரங்­களை தலைவர் தவணை முறையில் எடுத்துக் கொண்டார் என்றால், கட்­சியில் உள்ள மற்­ற­வர்கள் அதை களவு கொடுத்திருக்கின்றனர் என்­பதே அதன் அர்த்­த­மாகும்.

எனவே, இன்று ரவூப் ஹக்­கீமை மட்டும் குற்றம் சாட்டி விட்டு யாரும் விலகிச் செல்ல முடி­யாது. சமூ­கத்தின் முன்னால் அவர் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தப்­பட்­டாலும் கூட்டுப் பங்காளி­க­ளுக்கும் அதைப் பார்த்துக் கொண்­டி­ருந்­தோ­ருக்கும் மக்­க­ளுக்கு பொறுப்புச் சொல்ல வேண்­டிய கடப்­பாடு இருக்­கின்­றது. அதேபோல், சூடு­சுரணையற்ற முஸ்லிம் சமூ­கமும் இதில் மிகப் பெரும் வர­லாற்றுத் தவறை விட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. ஏனைய முஸ்லிம் கட்­சி­களைப் போலவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸூம் அமைச்சுப் பத­வி­க­ளுக்­கா­கவும், வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்­குமே முன்னுரிமை அளித்து செயற்­ப­டு­கின்­றது என்­பது போரா­ளி­களும் மக்­களும் அறி­யாத விட­ய­மல்ல. இவ்­வாறு முஸ்­லிம்­களின் அடை­யாள அர­சியல் முற்­று­மு­ழு­தாக வர்த்தகம­ய­மாகிக் கொண்­டி­ருக்­கின்ற ஒரு காலப்­ப­கு­தியில், இந்­தி­யாவில் நடிகைகளின் சிலை­க­ளுக்கு பால் ஊற்­று­வ­து­போல, தம்­மு­டைய அர­சி­யல்­வா­தி­களை திரைப்­பட ஹீரோக்­களை போன்று கண்­மூ­டித்­த­ன­மாக கொண்­டா­டு­கின்ற மக்களும், இந்த அர­சியல் பின்­ன­டை­வுக்கு கார­ண­மா­கி­யி­ருக்­கின்­றார்கள்.

வர­லாற்று சந்­தர்ப்பம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உண்­மை­யா­கவே அதன் ஸ்தாபக தலை­வரின் வழியில்தான் செல்­கின்­றதா என்ற சந்­தேகம், பல வரு­டங்கள் பழ­மை­யா­ன­தாகும். ஏனென்றால், அஷ்­ரஃபின் கொள்­கையை பின்­பற்­றுவோர் எதை­யெல்லாம் செய்திருக்க கூடாதோ அவற்­றை­யெல்லாம் ஹக்கீம் தலை­மை­யி­லான மு.கா. கடந்த காலங்­களில் செய்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக, திவி­நெ­கும சட்­ட­மூ­லத்தை கண்ணைமூடிக் கொண்டு ஆத­ரிக்கும் கள­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யமை, படுபாதகமான 18ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை கண்ணை திறந்து கொண்டே ஆத­ர­வ­ளித்து பின்னர் மனம் வருந்­தி­யமை ஆகி­யவை, மிகவும் வெளிப்­ப­டை­யான முன்­னைய தவ­று­க­ளாகும். இவற்­றை­யெல்லாம் செய்­தாலும், மக்­க­ளுக்கு இதற்கு சமமான ஏதா­வது நன்­மை­களை செய்ய எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. 16 வரு­டங்­க­ளாக கட்­சியின் தலை­வ­ராகவும், முழு அமைச்­ச­ரா­கவும் இருக்­கின்ற ஹக்கீம், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்­தி­ருக்­கின்றார் என்ற கேள்­விக்கு அவரிடமே தெளிவான பதி­லி­ருக்­குமா என்­பது சந்­தே­கமே.

பழைய கதையை விட்­டு­வி­டுவோம் என்று வைத்துக் கொள்வோம். நடப்பு விவ­கா­ரத்துக்கு வருவோம். அதன்­படி இப்­போது நாட்டில் நல்­லாட்சி ஏற்­பட்டு இருக்­கின்­றது. தம்­மு­டைய நீண்­ட­கால கோரிக்­கைக்கு, போராட்­டத்­திற்கு பலன் கிடைக்கும் கால­மாக இதை தமிழ் மக்கள் கரு­து­கின்­றனர். அந்த வகையில் 1978 இற்குப் பிறகு மிகப்பிரமாண்­ட­மா­ன­தொரு கட்­ட­மைப்பு மாற்றம் இலங்கை அர­சி­யலில் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாறியிருக்கின்ற அதே­நே­ரத்தில் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. இது எவ்­வ­ளவு முக்­கி­ய­மான காலம் என்­பதை சிறு­பிள்­ளை­கூட அறியும். அப்­ப­டி­யி­ருந்தும் மு.கா. எந்­த­வி­த­மான காத்­தி­ர­மான நகர்­வையும் மேற்கொள்­ள­வில்லை. தேசி­யப்­பட்­டியல், செய­லாளர் விவ­காரம் போன்ற சின்னச்சின்ன சிக்­கல்­க­ளையே தீர்த்து வைக்க முடி­யாமல் திண்­டாடிக் கொண்டிருக்கும் அக்­கட்சி, அர­சியல் தீர்வுப் பொதியில் முஸ்­லிம்­களின் உரி­மை­களை உறுதி செய்தல் என்ற பெரிய பாரத்தை பற்றி சிந்­திக்­காமல் இருக்­கின்­றமை மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

முஸ்லிம் காங்­கிரஸ் அடிப்­ப­டையில் கிழக்கு முஸ்­லிம்­களின் அபிலாஷைகளை மையமாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட கட்சி என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. இந்நி­லையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்று வரும் இணைந்த வட­கி­ழக்­கி­லான ஒரு தீர்வுப் பொதியை பெறு­வ­தற்கே தமிழர் தரப்பு எல்லா ரா­ஜ­தந்­திர நகர்­வு­க­ளையும் மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. அப்­ப­டி­யாயின், இந்த தீர்வுத் திட்ட வரைபில் முஸ்லிம்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்­பதை அழுத்­த­மாக வலி­யு­றுத்த வேண்­டிய பொறுப்பை இன்னும் மு.கா. நிறை­வேற்­ற­வில்லை. இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் மாகாணம் வேண்­டுமா? தனி மாகாண அலகு வேண்­டுமா? என்­பதை மு.கா. தலைவர் ஹக்கீம் இன்னும் பகிரங்கமாக அறி­வுப்புச் செய்­யவும் இல்லை. எல்­லா­வற்­றையும் மூடு­மந்­தி­ர­மாக செய்து­விட்டு, எல்லாம் கைவிட்டுப் போன பிறகு தலையில் அடித்துக் கொள்­வது, இந்த விட­யத்தில் சரிப்­பட்டு வராது.

வெளியில் வந்­தவை

இவ்­வா­றான பல­வீ­னங்­களை கட்­சியும் தலை­மையும் தள­ப­தி­களும் கொண்டிருந்தாலும் ஒரு குறிப்­பிட்ட காலம் வரைக்கும் அது வெளியில் வர­வில்லை. அவ்­வாறு வெளியில் வந்து சொன்­ன­வர்கள் துரோ­கி­க­ளா­கவும் மு.கா.வை அழிப்­ப­தற்கு புறப்­பட்­ட­வர்­க­ளா­கவும் பார்க்­கப்­பட்­டனர் என்­பதே வர­லாறு. சேகு இஸ்­ஸதீன் தொடக்கம் றிசாட் வரை அதுவே போரா­ளி­களால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட கருத்தியலுமாகும். ஆனால், இரண்டு முக்­கிய விட­யங்­களில் மு.கா. தலை­மையின் சாணக்­கியம் தவறிப் போன­தை­ய­டுத்து மேற்­சொன்ன எல்லா தவ­று­களும் இன்று பொதுத் தளத்தில் பேசு­பொ­ரு­ளாக ஆகி­யி­ருக்­கின்­றன. முத­லா­வது, தேசியப்பட்டியலுக்கு தற்­கா­லிக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நிய­மித்­ததில் இடம்பெற்ற முறை­கேடு. மற்­றை­யது, செய­லா­ளரின் அதி­கா­ரங்­களை பிடுங்கிக் கொண்­டமை ஆகும். இன்று மு.கா. தலைவர் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டிக்­கான உடனடிக் கார­ணி­க­ளாக இவற்­றையே குறிப்­பிட முடியும். அதா­வது தேசியப்பட்டியலுக்கு பொருத்­த­மா­ன­வர்­களை நிய­மித்­தி­ருந்தால் அல்­லது தற்காலிகமாக நிய­மிக்­கப்­பட்ட இரு­வ­ரையும் ஒரு மாதத்­திற்குள் பதவி விலக்கி உரியவர்­க­ளுக்கு அதைக் கொடுத்­தி­ருந்தால், அதே­போன்று செய­லா­ளரின் அதிகாரங்களில் கைவைக்­காமல் விட்­டி­ருந்தால் நிலைமை இவ்­வ­ளவு மோச­மா­ன­தாக ஆகி­யி­ருக்­காது.

இவ்­வி­டத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் எம்.ரி. ஹசன்­அ­லியை மட்டும் மனதிற் கொண்டு அதி­கா­ரங்­களை குறைக்கும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ள­வில்லை. மாறாக, இனி­வரும் காலங்­களில் கட்­சியின் செய­லா­ள­ராக வரக்­கூ­டிய நிசாம் காரி­யப்பர் போன்­றோ­ரிடம் அதிகாரங்கள் அதிகம் இருப்­பது தமக்கு ஆபத்து எனக் கரு­தி­யுமே ஹக்கீம், செயலாளரின் அதி­கா­ரத்தை குறைக்கும் முயற்­சியை மேற்­கொண்டார் என்­பது ரகசியமாகும். ஆனாலும், கண்­கட்­டி­வித்­தை­யாக அதைச் செய்­தமை மிகவும் தவ­றான முன்­னு­தா­ரணம். இவ்­வ­ளவு நடந்­த­பி­றகும் தாம் விட்ட மேற்­படி தவ­று­களை சரி செய்வதற்கு பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை ஹக்கீம் இன்னும் மேற்­கொள்ளவில்லை என்­பதே, இவற்­றை­யெல்­லாம் விட மிகவும் கவலை தரும் விட­ய­மாக இருக்­கின்­றது.

அர­சி­யல்­வா­திகள் ஒன்றும் தவ­றுக்கு அப்­பாற்­பட்­ட­வர்­க­ளல்லர். அந்­தந்த காலத்தின் நிலை­வ­ரங்­களின் படி எடுக்­கப்­பட்ட தீர்­மானம் பின்­னொரு நாளில் பிழை­யான முடிவுக­ளாக நமக்கே தெரிய வரலாம். அப்­போது அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். ஆயினும், மு.கா. தலைமை இவற்­றுக்­கெல்லாம் பிரா­யச்­சித்தம் தேடும் முயற்­சியில் ஆமை வேகத்­தி­லேயே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. தலை­வ­ருக்கு நிலைமைகளை எடுத்துச் சொல்லி களச் சூழலை சீர்­செய்ய வேண்­டிய எம்.பி.க்களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் உயர்­பீட உறுப்­பி­னர்­களும் கோள்­மூட்டி விடுவதிலும், தமக்கு எதி­ராக செயற்­ப­டு­பவர்கள் மற்றும் எழு­து­ப­வர்­க­ளுக்கு முட்டுக்கட்டை போடு­வ­தற்­கான தந்­தி­ரங்­களை சொல்லிக் கொடுப்­ப­தி­லுமே கவனம் செலுத்திக் கொண்­டி­ருப்­ப­தாக தெரிகின்­றது. இன்று ஹசன்­அ­லியும் பசீரும் வெட்டி வீழ்த்­தப்­பட்டால், நாளை பைசால் காசிமும் மன்­சூரும் இலக்கு வைக்­கப்­ப­டு­வார்கள் என்­பதை தள­ப­திகள் நினைவில் வைக்க வேண்டும். அதே­வேளை இன்று உசுப்பேற்றிவிட்டு பிழை­யாக வழி­ந­டத்­து­கின்ற தள­ப­திகள், நாளை கட்சித்தலைமைக்கு ஒரு சிக்கல் ஏற்­பட்டால், பாரத்தை தலைமை ­மீது போட்­டு­விட்டு விலகிக் கொள்­வார்கள் என்­பதை தலைவர் ஹக்கீம் நினைவிற் கொள்ள வேண்டும்.

இவ்­வாறு பல தவ­று­களைச் செய்­தி­ருக்­கின்றோம் என்­பதை தெரிந்து கொண்டும், வரலாற்று முக்­கி­யத்­துவம் மிக்க ஒரு காலப்­ப­கு­தி­யி­லேனும் அதற்­கான தீர்­வு­களை தேடு­வதை விடுத்து, ஒன்றும் நடக்­கா­தது போன்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொண்டு செயற்­பட மு.கா. தலைமை முயற்­சித்துக் கொண்­டி­ருப்­பதால் அவ­ருக்கு எதிரான விமர்­ச­னங்கள் மிக இல­கு­வாக மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்டு விடு­வதை காண முடி­கின்­றது. ஹக்கீம் செய்த பிழை­க­ளாலும், அவற்றை ஆறப்­போட்டு ஆற்­று­வ­தற்கு நினைப்­ப­தா­லுமே இன்று தலை­வரை மாற்ற வேண்டும், கட்சி யாப்பை திருத்த வேண்டும், கட்­சியை மீட்க வேண்டும் என்ற இன்­னோ­ரன்ன வெளி அழுத்­தங்­களும் கோஷங்­களும் வலுப்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. தன்­ம­னப்­போக்கில் போய்க் கொண்­டி­ருந்த அவ­ருக்கு புதுப்­புது தலை­யி­டிகள் நாளுக்கு நாள் உரு­வாகிக் கொண்டிருக்­கின்­றன.

கிழக்கின் எழுச்சி

அந்த வகையில், போரா­ளி­க­ளி­னதும் உட்­கட்சி அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் விமர்சனங்களால் ஏற்­ப­டு­கின்ற தலை­யி­டிக்கு அவர் பழக்­கப்­பட்டுப் போய்­விட்டார். ஒவ்­வொ­ரு­வ­ரையும் எவ்­வாறு வசியம் செய்­வது என்­பதை ஹக்கீம் நன்­றாக அறிந்து வைத்­தி­ருக்­கின்றார். ஆனால், ஹசன்­அ­லியின் விடாப்­பிடி, பசீர் சேகு­தா­வூதின் கடிதம் மற்றும் அறிக்கை ஆகி­யவை தீராத தலை­யி­டி­க­ளாக இருக்­கின்­றன. தன்­னு­டைய முதன்மைத் தொிவு தேசி­யப்­பட்­டியல் எம்.பி. அல்ல என்றும், செய­லா­ள­ருக்­கான அதிகா­ரங்­களை மீள வழங்­கு­மாறும் ஹசன்­அலி தனது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கின்ற சம­கா­லத்தில், பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் இருந்து வில­கி­யி­ருந்து மு.கா.வை. தூய்­மைப்­ப­டுத்தப் போவ­தாக பசீர் சேகு­தாவூத் அறி­வித்­தி­ருக்­கின்றார். இவை மு.கா. தலை­வரின் காய்­ந­கர்த்­தல்­க­ளுக்கு பாரிய சவா­லாக அமை­கின்­றன. இந்த வரி­சையில் ஆகப் பிந்­திய சவா­லாக கிழக்கு எழுச்சி பிர­சார நட­வ­டிக்கை அமைகின்­றது. அது பற்றி குறிப்­பிட்­டே­யாக வேண்­டி­யி­ருக்­கின்­றது.

முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியை தற்­போ­தைய தலை­மை­யிடம் இருந்து மீட்­டெ­டுத்தல் என்ற தாரக மந்­தி­ரத்­துடன் கிழக்கின் எழுச்சி பிர­சாரம் இப்­போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. கிழக்கை மீட்டல் மற்றும் அஷ்ரஃப் காங்கி­ரஸை ஸ்தாபித்தல் என்ற பெயர்­க­ளிலும் அறி­யப்­ப­டு­கின்ற இப்­பி­ர­சார வேலைத்­திட்டம், நிகழ்­கா­லத்தில் சரிக்கு சம­மான ஆத­ர­வையும் எதிர்ப்­பையும் பெற்றி­ருக்­கின்­றது. நாம் மேற்­கு­றிப்­பிட்ட கார­ணங்­களே இவ்­வா­றான ஒரு எழுச்சிக்குரல்கள் ஓங்கி ஒலிப்­ப­தற்கு ஏது­வான புறச்­சூ­ழலை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன என்­பதும், மூன்றே வாரங்­க­ளுக்குள் பர­வ­லான அவ­தா­னத்தை கிழக்கின் எழுச்சி பெற்றி­ருக்­கின்­றது என்­பதும் கூர்ந்து கவ­னிக்­கப்­பட வேண்­டிய அடிப்­ப­டை­க­ளாகும்.

இது முஸ்லிம் காங்­கிரஸ் என்ற கட்­சிக்கு எதி­ரான இயக்­க­மாக அன்றி, ரவூப் ஹக்கீமுக்கு எதி­ரான ஒரு இயக்­க­மா­கவே தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டிருக்­கின்­றது. மு.கா.வின் முன்னாள் பொரு­ளா­ள­ராக இருந்த வபா பாறூக் இதன் தலை­வ­ராக பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ளார். மு.கா.வின் ஸ்தாபக தலைவர் அஷ்­ரஃபின் கொள்­கைகள், குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்­ப­டையில் மு.கா.வை வழி­நடத்திச் செல்­லாத தற்­போ­தைய தலை­வரை அப்­ப­த­வியில் இருந்து வெளியேற்றி, கட்சியை கைப்­பற்றல் என்­பதே இவர்­க­ளு­டைய பணி­யி­லக்­காகும். இதற்­கான சந்திப்புக்­க­ளையும் திட்­டங்­க­ளையும் கிழக்கின் எழுச்சி ஏற்­பாட்­டா­ளர்கள் மேற்கொண்டு வரு­கின்­றார்கள். ஹக்­கீ­முக்கு எதி­ரான தரப்­பினர் எல்­லோரும் இதனை ஆத­ரிக்­கின்­றனர். அவ­ருக்கு ஆத­ர­வானோர் எல்­லோ­ருக்கும் இது கோபத்தை ஏற்­படுத்தி­யி­ருக்­கின்­றது. இவ்­வா­றான ஒரு பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு சாதகமான கள­நி­லை­மை­களை ஏற்­ப­டுத்­தி­யவர் மு.கா. தலைவர் என்­றாலும், கிழக்கின் எழுச்சி எந்­த­ள­வுக்கு சாத்­தியம் என்­பதும் பரி­சீ­ல­னைக்­கு­ரி­யது.

அஷ்ரஃப் காலத்தில் இருந்து இன்று வரை பலர் ஹக்­கீ­முக்கு எதி­ரான அர­சியல் பிரசாரங்­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். ஆனால் அதனால் அவர்­க­ளு­டைய அரசியல் வெற்றி பெற்­றாலும், மு.கா. என்ற கட்­சியின் தலை­வ­ராக இருந்த ஒரே­யொரு கார­ணத்தால் அஷ்­ரஃ­பையோ ஹக்­கீ­மையோ வீழ்த்த முடி­ய­வில்லை. அவர்கள் பற்றிய நன்­ம­திப்பு குறைந்­தி­ருந்­தாலும் இன்­று­வரை பிர­தான முஸ்லிம் கட்சித் தலைவ­ராக ஹக்­கீமே இருக்­கின்றார். ஆரம்­பத்தில் ஸ்தாபக தவி­சாளர் சேகு இஸ்ஸதீன் ஒரு புரட்­சியை முன்­னெ­டுத்தார். அதன் பிறகு அதா­வுல்லா கிழக்கை மீட்பதற்­கான பாத­யாத்­தி­ரையை நடத்­தினார். றிசாட் பதி­யுதீன் குழு­வினர் மு.கா.வுக்கு எதி­ராக அர­சியல் செய்­தனர். ஹிஸ்­புல்­லாவும், அமீ­ர­லியும், தற்­போது முத­ல­மைச்­ச­ராக இருக்­கின்ற நஸீர் அக­மட்டும் வேறு­ப­லரும் கட்­சிக்கு சவா­லாக அர­சியல் செய்­தனர். ஆனால், கட்­சியை ஹக்­கீ­மிடம் இருந்து கைப்­பற்ற முடி­ய­வில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் கிழக்கின் எழுச்சி வேலைக்கு உத­வாது என தெரிகின்­றது. அத்­தோடு கட்­சிக்கு வெளியில் இருந்து கட்­சியை கைப்­பற்­று­வது என்றால் அதற்­கான மூலோ­பா­யங்கள் பலம் பொருந்­தி­ய­தாக இருக்க வேண்டும்.

இவ்­வி­டத்தில் ஒன்றை மறந்து விடக்­கூ­டாது, அதா­வது மேற்­கு­றிப்­பிட்ட எல்லாப் புரட்சிகளின் போதும் மு.கா.வின் தூண்­க­ளான பசீரும் ஹச­ன­லியும் தலை­வர்­க­ளுடன் இருந்­தனர். அதே­போன்று அஷ்ரஃப் இப்­போது இல்லை என்­ப­துடன், முன்­பி­ருந்த பலம் பொருந்­திய நிலையில் இப்­போது ஹக்­கீமும் இல்லை. இந்தப் பின்­ன­ணியில் ஜனநாயக ரீதி­யாக, வெளிப்­ப­டை­யாக, சமூ­கத்தை முன்­னி­றுத்தி மேற்­கொள்­ளப்­படும் எந்தப் போராட்­டமும் மிக இல­கு­வாக மக்கள் மய­மா­வ­தற்கு நிறையவே சாத்தியமிருக்கின்றது. ஆரம்பத்தில் கிழக்கின் எழுச்சி என்பது மு.கா.வுக்கு அழுத்தக் குழுவாக செயற்படும். அப்போதும் மு.கா.வுக்குள் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால் இது ஒரு அரசியல் இயக்கமாக பரிணமிக்கலாம். அவ்வாறு அந்தப்பக்க தராசு கனதியானால், இப்போது ஹக்கீமுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்ற பிழைப்புத் தேடி வந்தவர்கள் ஹக்கீமின் எதிர் பக்கம் தாவி விடமாட்டார்கள் என்று யாராலும் உறுதியாக கூற முடியாது.

இவ்விடத்தில் மு.கா. தலைவருக்கு ஒரு தெரிவு இருக்கின்றது. அவர் நினைத்தால் இன்று எழுந்திருக்கின்ற அலைகளையும் கோஷங்களையும் மிக இலகுவாக அடக்கி விடலாம். கட்சிக்குள் முறையான கலந்தாலோசனையுடனான கட்டமைப்பை உருவாக்கல், தேசியப்பட்டியல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல், செயலாளரின் அதிகாரங்களை மீளக் கையளித்தல், கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டி அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், கலகெதர தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளையும் அஷ்ரஃப் காட்டிய அடையாள அரசியலையும் முன்னிறுத்தி செயற்படல் போன்றவற்றை இவற்றுக்கான ஆலோசனைகளாக தலைவர் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு விரைந்து செயற்பட்டால் நிலைமைகளை கட்டுப்படுத்தி, தனது சாணக்கியத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்புள்ளது.

தாமதித்தால் தவிக்க நேரிடலாம்.

நன்றி: வீரகேசரி (25 ஜுன் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்