புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு டொனி பிளயர் முயற்சித்தார்; கோட்டாபய குற்றச்சாட்டு

🕔 January 6, 2016
Gottabaya rajapakse - 098விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரித்தானிய பிரதமராக அப்போது இருந்த டொனி பிளயர் முயற்சித்தார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆயினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளயர், எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து உரையாடியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய கருத்து வெளியிடும்போதே, மேற்கண்ட விடயங்களை வெளிப்படுத்தினார்.

டொனி பிளயர் – சம்பந்தன் சந்திப்பின்போது, இலங்கையின் பொறுப்புக்கூறல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

“ஈராக்கில் இடம்பெற்ற பிரித்தானியாவின் அட்டூழியங்கள் குறித்து, பொறுப்புக்கூறலை இன்னும் பிரித்தானியா நிறைவேற்றவில்லை.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த பிரித்தானிய பிரதமராக அப்போது இருந்த டோனி பிளயர் முயற்சித்தார்.

இதற்காக பிளயர், தனது வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபேன்ட்டை இலங்கைக்கு அனுப்பினார். எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அதிக நன்மைகளை பெற்றுக்கொடுத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு டொனி பிளயர் தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளதோடு, அவருடடைய சந்திப்புக்களை உயர்ஸ்தானிகரம் ஏற்பாடு செய்யவில்லை என்றும்தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்