சிரியா மீதான கூட்டுத் தாக்குதல்; நோக்கம் நிறைவேறியதாக ட்ரம்ப் தெரிவிப்பு

🕔 April 14, 2018

மெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், சிரியா மீது மேற்கொண்ட கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அறிவுக்கும் படை வலிமைக்கும், தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் நன்றி கூறியுள்ளார். மேலும், இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுப் படையினர் சிரியாவில் அந்த அரசாங்கத்தக்குச் சொந்தமான மூன்று இடங்கள் மீது சனிக்கிழமை குண்டு வீசினர். ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படும் மற்றும் சேகரித்து வைக்கப்படும் இடங்கள் மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் அந்த நாட்டு படையினர் நடத்தியதாகக் கூறப்படும் ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் வகையில், அமெரிக்க கூட்டு நாடுகளின் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மேற்படி தாக்குதலை மிகவும் கடுமையான முறையில் கண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிர் புடின் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா, அந்த நாட்டிலுள்ள தமது படையினர் தாக்கப்பட்டால் ராணுவ ரீதியாக பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்தது.

இந்த நிலையில், காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக தமது நியாய உரிமை உள்ள வலிமையை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயல்படுத்திக் காட்டியிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்