வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றானா, வெளியே வந்த டேன் பிரியசாத் ; தகவல் மூலங்களின் மௌனம் குறித்து ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீன் சந்தேகம்

🕔 December 10, 2017

– அஹமட் –

முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த டேன் பிரியசாத், விளக்க மறியலில் இருந்து வெளியே வந்த நிலையில், வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற வலுவான சந்தேகம் இருப்பதாக ஊடகவியலாளரும், சமூக நல செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸார்தீன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் டேன் பிரியசாத் தொடர்பில் கண்காணித்து, அவனின் செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை வெளியிட்டு வந்த அநேகமான தரப்புக்கள், தற்போது அவனைப் பற்றி எந்தவொரு செய்திகளையும் வெளியிடாமல், மௌனம் காப்பதன் பின்னணியில், ஏதாவது நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் நிஸார்தீன் எழுதியுள்ள பேஸ்புக் பதிவின் முழு விபரம் வருமாறு;

நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் எனது நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசியில் கதைத்தார். தான் இலங்கையிலிருந்து அரபு நாடொன்றுக்கு செல்வதற்காய் ஓமான் எயார் விமானத்தில் இருப்பதாகவும் சரியாக காலை 9.50 மணிக்கு விமானம் புறப்படவிருப்பதாகவும் கூறிய நண்பர்,

”உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒரு நபர் இந்த விமானத்தில் இருக்கிறார் ” என்றார்.

யார் அந்த நபர்? எனக் கேட்டேன்.

டேன் பிரியசாத் என்ற நபரை ஒத்த ஒருவர் எனது பின்னாலுள்ள ஆசனம் ஒன்றில் அமர்ந்திருக்கிறார்.

ஆனால் அவரின் தலை முடி மிகவும் குட்டையாக வெட்டப்பட்டுள்ளது.
தாடி முழுவதுமாக சவரம் செய்யப்பட்டு இருக்கிறது.

நான் நினைக்கிறேன் இவன் அந்த டேன் பிரியசாத் தான். எனக்கென்றால் எந்த சந்தேகமுமில்லை. தலை முடியிலும், தாடியிலும் ஒரு மாற்றம் இருக்கிறது. நன்றாக உற்று நோக்கினால் அவன் டேன் பிரியசாத் தான்” என்று அடித்துக் கூறினார்.

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நான், நண்பரிடம் கூறினேன்.

”அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதுவும் அவருக்கு எதிராக மியன்மார் அகதிகளை அச்சுறுத்திய விவகாரத்தில் ICCPR சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலகுவில் அவரால் வெளியே வர முடியாது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே அவனுக்கு வழங்கப்பட்டிருந்த நிபந்தனையுடனான பிணை கூட இல்லாமலாக்கப்பட்டுள்ளது. அவனால் வெளியே வருவது சாத்தியமேயில்லை” என்று நான் நண்பருக்கு விளக்கம் கொடுத்தேன்.

”கொஞ்சம் விசாரித்து பாருங்கள்” என நண்பர் மீண்டும் தொடர்ந்தார்.

”அப்படி அவன் வெளியே வந்திருந்தால் ஆர்ஆர்ரி RRT சட்டத்தரணிகள் நிச்சயம் அந்த செய்தியை மக்கள் மயப்படுத்தியிருப்பார்கள். அவர்கள் கூட இது தொடர்பாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. அந்த நம்பிக்கையில்தான் கூறுகிறேன். அவன் நிச்சயம் உள்ளே தான் இருக்கிறான்” என்றேன் நான்.

நண்பர் விடவில்லை.

”உங்களைப் போன்று, அவனை நான் நேரில் கண்டதில்லை. என்றாலும் நான் உறுதியாக கூறுகிறேன். அவன் தான் இவன். கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள்” என அழுத்திக் கூறினார்.

விமானம் புறப்பட தாயராகுவதால் தொலைபேசியை துண்டிப்பதாய் கூறிய அவர், தான் ரியாத் சென்றதும் மீண்டும் தொடர்பு கொள்கின்றேன். என்று அழைப்பைத் துண்டித்தார்.

நேற்று அலுவலம் சென்ற நான். கணினியைத் திறந்து முகப்புத்தகம், வாட்ஸ்அப், செய்தி இணையதளங்கள் எல்லாவற்றையும் கிளறினேன். ஒன்றும் கிடைக்கவில்லை.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீனுக்கு அழைப்பெடுத்தேன். பலன் கிடைக்கவில்லை.

டேன் பிரியசாதிக்கு வெளியே வர சந்தப்பமே இல்லை. அந்த விமானத்தில் இருந்தது அவனாக இருக்க முடியாது என்று முடிவு செய்து கொண்டேன்.

இன்று காலை 10.12.2017 அதே நண்பர் அழைப்பெடுத்தார்.

”டேன் பிரியசாத் வெளியே வந்து விட்ட செய்தி கடந்த வாரம் ஜப்னா முஸ்லிம் இணைய தளத்தில் வெளிவந்ததாம். எனது மனைவி அந்த செய்தியை வாசித்ததாக கூறுகிறார். டேன் பிரிசாதுக்கு எதிராக பல முறைப்பாடுகளை செய்த உங்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று எனது நண்பர் கூறினார்.

எனக்கு வெட்கமாக இருந்தது. ஊடகங்களோடு தொடர்புள்ள எனக்கு ஏன் இந்த செய்தி கிடைக்க வில்லை? அதுமட்டுமல்லாமல் இந்த இனவாதிக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை எப்போதும், நான் கண்காணித்தக்கொண்டிருப்பவன்.

எங்கோ ஒரு சதி இடம்பெற்றிருக்கிறது.

எனது மனம் குறுகுறுத்தது.

RRT அமைப்பு அடிக்கடி இந்த வழக்குகள் தொடர்பாக வழங்கி வந்த தகவல்கள்கள் கூட, இப்போது இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.

செய்தியை ஊர்ஜிதம் செய்வதற்காக சட்டத்தரணி சிராஸ் நூர்தீனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பெடுத்தேன். உடனே அவர் அழைப்பை துண்டித்தார்.

அவரது ஜுனியர் ஒருவருக்கு அழைப்பெடுத்தேன். பதிலே கிடைக்கவில்லை.

‘இணையத்தள நண்பர் ஒருவருக்கு அழைப்பெடுத்து கேட்டேன். அப்படியான செய்தி தனக்கும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

‘ஜப்னா முஸ்லிம்’ சகோதரர் அன்ஸிருக்கு அழைப்பெடுத்துக் கேட்டேன்.

”டேன் பிரியசாத் வெளியே வந்து பல நாட்களாகி விட்டன. வெளியே வந்து பல நாட்களுக்குப் பிறகுதான் எனக்கும் செய்தி கிடைத்ததது” என்றார் அன்ஸிர்.

டேன் பிரியசாத் தொடர்பான தகவல்களை தருவதற்கு சட்டத்தரணிகள் யாரும் தயரராக இல்லை என்பது மட்டும் புரிந்தது.

அண்மையில் இந்த இனவாதிகள் தொடர்பாக இடம்பெற்று வரும் அரசியல் காய் நகர்த்தல்கள் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ICCPR சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என, இதே சட்டத்தரணிகள் கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது.

பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக ஊடகங்களில் வலம் வர வேண்டிய ஒரு செய்தி எப்படி இருட்டடிப்பானது?

இந்த நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 27ம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டு டேன் பிரியசாத் வெளியெ வந்ததாகவும். தான் அவரை நேரில் கண்டதாகவும் அவரின் வீட்டுக்கு சற்று தொலைவில் இருக்கும், இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக போராடிவரும் றிஷாம் மரூஸ் உறுதிப்படுத்தினார்.

அவர் கூட இந்த செய்தியை தனது பேஸ்புக் நேரலையில் கொடுக்காமல் இருந்தது ஏன்? என்று எனக்கும் புரியவில்லை.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்களை துணிச்சலுடன் தனது பேஸ்புக் நேரலையில் இவர் பதிந்து வந்துள்ளார்.

எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது.

நேற்று இலங்கையிலிருந்து ஒமான் எயார் WY0376 விமானத்தில் காலை 9.50 மணிக்கு மஸ்கட் நோக்கி பயணித்த நபர் உண்மையில் டேன் பிரியசாசத்தானா?

டேன் பிரியசாதின் நீதிமன்ற பிணை தொடர்பான செய்திகள் வெளியே வராமல் தடுத்த சக்தி எது?

சந்தேகங்கள் வலுக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்