பாவம்

🕔 August 8, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

ல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின் நடுப்பகுதியில் இந்த எண்ணக்கருவின் உள்ளடக்கத்தை விருத்தி செய்தது. ஐ.நா சபை 1992ஆம் ஆண்டு வெளியிட்ட, ‘ஆட்சியும் அபிவிருத்தியும்’ எனும் ஆவணத்தில் இந்த எண்ணக்கரு மேலும் தெளிவுபடுத்தப்பட்டது.

நல்லாட்சி என்பதன் பொருள், ஊழல்களையும் முறைகேடுகளையும் இல்லாதொழிப்பதாகும். சிறுபான்மையினரின் ஆதங்கங்களைச் செவிமடுத்து, நீதியை நிலைநிறுத்துவதாகும். மக்களின் பரந்த பங்கேற்புடன் கூடிய, பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு, சமூக நலனை மேம்படுத்துவதாகும்.

2015ஆம் ஆண்டு நமது நாட்டில் உருவான புதிய ஆட்சியை, நல்லாட்சி என்று அழைக்கிறோம். இந்தப் பெயரை ஆட்சியாளர்களே தமது அரசாங்கத்துக்குச் சூட்டிக்கொண்டனர்.

தேர்தல் பிரசாரங்களின் போது, தாம் அமைக்கவுள்ள அரசாங்கமானது, ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்றுதான் அழைக்கப்படும் என, தற்போதைய ஆட்சியாளர்கள் கூறினர். இந்தப் பெயர் மீது, மக்களுக்கும் ஒரு வசீகரம் ஏற்பட்டது.

முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களும் மோசடிகளும் மக்களுக்குப் பெருத்த ஏமாற்றங்களையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தன. நாட்டில் நல்லாட்சி ஒன்று மலர வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் இந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் வாக்களித்தனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் யாரோ சிலர் வென்று விடுகின்றனர். ஆனால், வாக்காளர்கள் எல்லோரும் தோற்றுப் போய் விடுகின்றார்கள். இறுதித் தேர்தலிலும் இதுதான் நடந்து விட்டதோ என்பதுதான் மக்களின் ஆதங்கமாகும். நல்லாட்சியைக் கொண்டு வரப் போவதாகக் கூறி, 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், அதேஆண்டு, இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மிகப் பெரும் ஊழல், மத்திய வங்கியின் பிணை முறி மோசடியின் மூலம் நடந்திருக்கிறது.

இன்னொருபுறம், மேற்படி பிணை முறி மோசடியில் அப்போது நிதியமைச்சராகப் பதவி வகித்த, தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சம்பந்தப்பட்டுள்ளார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில், விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, ரவி கருணாநாயக்கவையும் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது, அமைச்சர் ரவி கருணாநாயக்க வழங்கிய பதில்கள் குறித்து, அரசியலரங்கில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதற்கும் பிடி கொடுக்காமல் ‘எதுவும் தெரியாது’ என்று, ஆணைக்குழுவினரின் கேள்விகளில் அதிகமானவற்றுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை, ஒன்றிணைந்த எதிரணியினர் கொண்டு வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அரசாங்கத்துக்குள்ளும் ரவி கருணாநாயக்க மீதான கசப்புகள் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார். மேலும், “ரவி கருணாநாயக்க ஒரு கனவானாக இருப்பாராயின், அவர் மீதான விசாரணை நிறைவுறும் வரையிலாவது, அவருடைய அமைச்சர் பதவியை இராஜிநாமாச் செய்ய வேண்டும்” எனவும், அமைச்சர் தயாசிறி தெரிவித்திருக்கின்றார்.

இதுபோலவே, “விசாரணை முடியும் வரையிலாவது ரவி கருணாநாயக்க, அவரின் அமைச்சுப் பதவியை இராஜிநாமாச் செய்ய வேண்டும்” என்று, அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கட்சியைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான தயா கமகேயும் கூறியிருக்கின்றார்.

இதற்கு இன்னொருபடி மேலாகச் சென்று, அமைச்சர் சஜித் பிரேமதாஸ பேசியுள்ளார். “மோசடிப் பேர்வழிகளைக் காப்பாற்றும் பொருட்டு, நாடாளுமன்றில் வாக்களிக்குமாறு என்னிடம் கேட்டால், எனது அமைச்சுப் பதவியை இராஜிநாமாச் செய்வேன்” என்று அவர் கூறியிருக்கின்றார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளும் அரசாங்கத்துக்கு வெளியிலுள்ள சிறுபான்மை கட்சிகளும் இந்த விவகாரத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றன என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

குறிப்பாக, முஸ்லிம்களின் கட்சி என்று கூறிக் கொள்ளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழர்களின் அரசியல் சக்தி என்று அடையாளம் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த விவகாரத்தில் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது, ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

ஆகக்குறைந்தது, அமைச்சர்களான தயாசிறி, தயா கமகே மற்றும் சஜீத் பிரேமதாஸ ஆகியோருக்குள்ள தைரியத்தின் பாதியளவுகூட, முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த விவகாரத்தில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியிலும் வெளியிலும் அங்கம் வகிக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி உள்ளிட்ட கட்சிகளும் இந்த விடயத்தில் மௌனிகளாகவே உள்ளன.

இத்தனைக்கும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகக் களமிறங்க வேண்டியதொரு கட்சியாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. காரணம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை, அந்தக் கட்சி தமது வழிமுறையாகக் கொண்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் யாப்பிலேயே இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிதி தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. முஹம்மது நபியவர்களுக்குப் பின்னர், ஆட்சி பீடமேறிய பிரதான நான்கு ஆட்சியாளர்களில் உமர் (ரலி) அவர்களும் ஒருவராவார். உமரின் ஆட்சி பற்றி, அந்நிய மதத்தைச் சேர்ந்தவர்களும் சிலாகித்துப் பேசுவதுண்டு. “இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால், உமரைப் போல் ஆட்சி செய்வேன்” என்று, வெள்ளைக்காரர்களிடம் காந்தி கூறியதாக ஒரு கதை உண்டு.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு முறை வந்திருந்தபோது, நிகழ்வொன்றில் பேசுகையில், “ஆட்சியென்றால் உமர் (ரலி)யின் ஆட்சி போல் இருக்க வேண்டும்” என, பேசியிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

உமர் (ரலி) ஆட்சியாளராக இருந்தபோது, ஒரு நாள் இரவு திறைசேரி (பைத்துல்மால்) தொடர்பான கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரைச் சந்திப்பதற்காக ஒருவர் வந்தார். உடனே, அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து விட்டு, வேறொரு விளக்கை உமர் (ரலி) ஏற்றினார். வந்தவருக்கு எதுவும் புரியாமல் அது தொடர்பில் விசாரித்தார். நீங்கள் வரும் போது, திறைசேரி கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன்போது அரசாங்கத்துக்குரிய விளக்கைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இப்போது, நீங்களும் நானும் தனிப்பட்ட விடயங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அதனால், அரசாங்கத்துக்குரிய விளக்கை அணைத்து விட்டு, எனது சொந்த விளக்கை ஏற்றினேன் என்று கூறினார்கள். இது ஆதாரபூர்வமான வரலாறு.

பொதுச் சொத்துகளையும் அரச நிதியையும் கையாளும் போது எந்தளவு பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, உமர் (ரலி) யின் மேற்படி வரலாறு ஒரு பாடமாகும். இவ்வாறான பாடங்கள் மனித குலத்துக்கு பொதுவானவையாகும்.

பொதுச் சொத்துகள் தொடர்பில், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளில் எத்தனை பேரிடம் இந்தப் பக்குவம் உள்ளது என்று கேட்டால், அதற்குரிய பதில் மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே இருக்கும்.

உடலும், மனமும் சுத்தமாக இருப்பவர்கள் அழுக்கைத் தொடுவதற்கு ஆயிரம் முறை யோசிப்பார்கள். ஆனால், இரண்டுமே எப்போதும் அழுக்காக இருப்பவர்களுக்கு, அசிங்கத்தில் புரளுவதென்பது, அப்படியொன்றும் பெரிய விவகாரமாக இருக்காது. ஊழல் பற்றிய அச்சம் உள்ளவர்கள், ஊழலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.

பிணை முறி விவகாரம்தான் இப்போது நாட்டில் பேசுபொருளாக உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பில் மற்றைய கட்சியினர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது ஒரு பக்கமிருக்க, முஸ்லிம் கட்சிகள் தமது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரியப்படுத்துதல் வேண்டும்.

அரசாங்கத்தில் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, தமக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.

மட்டக்களப்பில் மட்டும், மு.காவுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். இவ்வாறானதொரு நிலையில், ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்கும் விதத்தில் வாக்களிக்குமாறு ஐ.தே.கவின் தலைவர் உத்தரவு பிறப்பித்தால், முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் ஐ.தே.கட்சியின் தலைமை பிறப்பிக்கும் உத்தரவுக்கு எதிராகச் செயற்பட மாட்டாது என்கிற அபிப்பிராயங்கள்தான் அரசியலரங்கில் அதிகம் காணப்படுகின்றன.

மிகவும் மிஞ்சிப்போனால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் விலகி நிற்கக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைத்தான் செய்வார்கள் என்றும் அரசியலரங்கில் பேசப்படுகிறது.

பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது, ஒரு குற்றச்சாட்டு மட்டுமே இப்போது சுமத்தப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றம் தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன. விசாரணையின் இறுதியில், அவர் குற்றமற்றவர் என்று கூட, சிலவேளை தீர்ப்பாகலாம்.

ஆனாலும், அதிகாரத்தை வைத்துக் கொண்டு, தன்மீதான விசாரணையை அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்கொள்வது எவ்வகையிலும் ஏற்புடையதாகாது. ரவி கருணாநாயக்க மீது, நியாயமானதொரு விசாரணையை மேற்கொள்வதற்கு, அவர் தன்வசம் வைத்திருக்கும் அமைச்சர் பதவி எனும் ‘அதிகாரம்’ தடையை ஏற்படுத்தலாம் என்கிற சந்தேகம் பரவலாக உள்ளது.

அதனால்தான், விசாரணை முடியும் வரையிலாவது, ரவி கருணாநாயக்க தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென்று, அமைச்சர்களான தயாசிறி மற்றும் தயா கமகே போன்றோர் கோரி வருகின்றனர்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளும் ஆகக்குறைந்தது அமைச்சுப் பதவியிலிருந்தாவது ரவி கருணாநாயக்க விலக வேண்டுமென்று இப்போதைக்கு வலியுறுத்த வேண்டும்.

அப்படியில்லாமல், ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசம் தெரிவிக்கும் விதமாக, இந்த விவகாரத்தில் கண்களை மூடிக்கொண்டு சிறுபான்மை கட்சிகள் செயற்படுமாக இருந்தால், அது சொந்தச் செலவில் சூனியம் வைத்தது போலகி விடும்.

வெளிநாடுகளில் இவ்வாறானதொரு குற்றச்சாட்டு, அமைச்சர் ஒருவர் மீது சுமத்தப்பட்டிருக்குமாயின், உடனடியாக அந்த அமைச்சர் இராஜினாமா செய்திருப்பார். அவ்வாறான பல நிகழ்வுகளை நாம் கண்டிருக்கின்றோம். அருகிலிருக்கும் இந்தியாவில் கூட, குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்த வரலாறுகள் உள்ளன.

ஆனால், அமைச்சர் ரவி அதைச் செய்யாமல் இருப்பது கோபத்தையும் ‘மிஸ்டர் க்ளீன்’ என்று அழைக்கப்படுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதைச் செய்யுமாறு ரவியை வலியுறுத்தாமல் இருப்பது ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.

பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க குற்றவாளியா, சுற்றவாளியா என்பது பற்றி இந்தக் கட்டுரை பேச முற்படவில்லை. ஆனால், இலங்கை வரலாற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிகப் பெரிய ஊழலுடன் தொடர்புபட்டுள்ளார் என்கிற குற்றச்சாட்டு, தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள நிலையிலும், தனது பதவியை இராஜினாமாச் செய்யாமல், தன்மீதான விசாரணையை ரவி கருணாநாயக்க எதிர்கொள்வதைப் பார்க்கும் போது, ஏரானமான சந்தேகங்களும் கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுவதைக் காண முடிகிறது.

ஒரு குற்றத்தைச் செய்வது எவ்வளவு பெரிய பாவமோ, அந்தக் குற்றத்தைக் கண்டும் காணாமல் இருப்பதும் அவ்வாறானதொரு பாவத்துக்கு நிகரானதாகும்.

நன்றி: தமிழ் மிரர் (08 ஓகஸ்ட் 2017)  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்