அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு

🕔 June 1, 2017
– ஆர். ஹஸன் –

னர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கியதோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ, கோத்தப்பிட்டிய பிரதேசத்துக்கு விஜயம் செய்த ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணங்களையும், 100 கட்டில் மெத்தைகளையும் முதற்கட்டமாக கோத்தப்பிட்டிய முகையித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளித்தார்.

பின்னர், பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ராஜாங்க அமைச்சர், மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திருப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இதேவேளை, ராஜாங்க அமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செயலாளர் அஷ்ஷேய்க் மும்தாஸ் (மதனி) ஆகியோரின் பணிப்புரைக்கமைய, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் போர்வை, அக்குறஸ்ஸ மற்றும் கொடபிட்டிய பகுதிகளில் உள்ள சேதமடைந்த வீதிகள் மற்றும் குடி நீர் கிணறுகளை சுத்திகரிப்பதற்கு தேவையான பொருட்களுடன் தொண்டர் குழுவொன்றினை ஹிரா பௌண்டேஷன் ஏற்கனவே அப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்திருந்தது.
அக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து மக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் உலர் உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்