யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு
🕔 May 6, 2016




– பாறுக் ஷிஹான் –
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளை மற்றும் வாள்வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்படி குற்ற நடவடிக்கைகள் தொடர்பில், சுன்னாகம் பகுதியில் 15 முறைப்பாடுகளும் தெல்லிப்பழை பகுதியில் 03 முறைப்பாடுகளும் அச்சு வேலி பகுதியில் 04 முறைப்பாடுகளும் கோப்பாய் பகுதியில் ஒரு முறைப்பாடும்பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன.
அதனடிப்படையில் பொலிஸார் பல குழுக்களாக பிரிந்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் மேற்கூறிய பகுதிகளில் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சுமார் ஐவர் கொண்ட குழு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதேவேளை, கொள்ளையடித்த நகைகளை சுண்ணாகம் பகுதிக்கு விற்பதற்காக வந்திருந்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணை செய்தமையின் அடிப்படையில், திருடிய நகைகளை உருக்கி கடைகளுக்கு விற்பனை செய்யும் மற்றுமொரு சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், மேற்படி கொள்ளை குழுவினைச் சேர்ந்த ஏனைய சந்தேக நபர்கள் தலைமறைவாக வாழ்வதாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் 57 பவுணுக்கும் அதிகமானதாகும். ஆயினும், நகைகள் சில உருக்கப்பட்டமையினால், அவற்றினை அடையாளம் காண முடியாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான சுன்னாகம் அளவெட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த ‘சிக் புக்’ என்று செல்லமாக அழைக்கப்படும் தவராசா தயாபரன் (வயது-24) என்பவரின் ஆலோசனைக்கு இணங்க, யாழ் நகர நகைக்கடைகளுக்கு மானிப்பாய் பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரான வீரசிங்கம் சிவானந்தன் என்பவரினால் (வயது-45) விற்கப்பட்டிருந்தன.
கடந்த 03 மாதங்களாக கொள்ளையர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேக நபர்களின் தொலைபேசி இலக்கங்களை பின்தொடர்ந்து தகவல்களை பெற்ற பின்னரே கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்கனை கைது செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் பிரதம பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எல். துஸ்மந்த தலைமையிலான பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பியசாந்த உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.
இதேவேளை, சந்தேக நபரிடமிருந்து தங்க நகைகளை வாங்கிய நகை கடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




Comments



