தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு

🕔 April 5, 2016
Keerthi Thennakon - 011லங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் 04 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக, ஊழலுக்கெதிரான முன்னணியின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடு பெற்றுள்ள மொத்தக் கடன் தொகையினை, நாட்டிலுள்ள மக்களின் எண்ணிக்கையால் பிரித்துப் பார்க்கும் போது, ஒவ்வொரு நபரும் மேற்படி தொகையினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலைக் கூறினார்.

இதேவேளை, இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலரும் இன்று அரச நிறுவனங்களில் பணிபுரிவதாகவும், அவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் சாவகச்சேரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் பலரும் கருத்து வெளியிடுகின்றனர். ஆனால் கடந்த ஆட்சியின் போது, இவ்வாறான அங்கிகள் மற்றும் யுத்த ஆயுதங்களைப் பற்றி யாரும் பேச முன்வரவில்லை எனவும் கீர்த்திதென்னகோன் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறும் ஊழல்கள் பற்றி அவதானத்தை செலுத்தும் போது, கூட்டு எதிர்க்கட்சி போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக இதன்போது கூறினார்.

நமது நாட்டு வங்கிகளில் அதிகமான மோசடிகள் இடம்பெறுகின்றன. ஆனாலும் அதனுடன் தொடர்புடையவர்கள் இதுவரையிலும் கைதுசெய்யப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் பதவியில் உள்ளமை கவலைக்குரிய விடயமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் குடிமகன் செலுத்த வேண்டிய கடன் தொகை 04 இலட்சத்து 50,000 ரூபாய் என்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்