யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு

🕔 April 5, 2016
Yoshitha - 0986தெஹிவளையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அதி சொகுசு வீடுகள் இரண்டும், யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் உரிமையாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான யோசிதவினால் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் 65 பேர்ச்சர்ஸ் நிலம் கொள்வனவு செய்யப்பட்டு, பல கோடிகள் பெறுமதியான சொகுசு வீடுகள் இரண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சி.எஸ்.என். என அழைக்கக்படும் கால்டன் நெட்வேர்க் ஊடக நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே இந்த தகவல்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 பேர்ச்சர்ஸ் காணி, பகுதி பகுதியாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெஹிவளை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 05 பேர்ச்சர்ஸ் நிலம், சந்தை பெறுமதியை விடவும், மிகவும் குறைந்த விலைக்கு இவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி காணிகளில் 35 பேர்ச்சர்ஸ் யோசிதவின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மிகுதி இடம் திருமணமாகாத 88 வயதான பெண் ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சொகுசு மாடி வீடுகள் இரண்டிலும் மின் உயர்த்தி (Lift) வசதிகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு 828/16 இலக்கத்தின் கீழ் இந்த விடயம் தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்