சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான்

🕔 April 3, 2016
Mujibur Rahman - 095சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாசரத்துக்கு நகர்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினரின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சாவகச்சேரியில் இவ்வாறானதொரு சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என  சந்தேகம்கொள்ள தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 30 வருட கால யுத்தத்தால் பலவிதமான இழப்புகளை சந்தித்த தமிழ் மக்கள், மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்குள் செல்லும் வல்லமையையோ, மன நிலையையோ கொண்டவர்களாக இல்லை. எதிரணியினரின் விசமப் பிரசாரங்கள் மிகுந்த கவலையளிக்கிறது.

அத்துடன், சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையானது எதிரணியின் சூழ்ச்சியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள முஜிபுர் ரஹ்மான், இந்த சூழ்ச்சியை நல்லாட்சி அரசாங்கம் முறியடிக்கும் என்றார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கஞ்சா போதைப்பொருள் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார், தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்களைக் கைப்பற்றியதோடு சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்துமுள்ளனர். குறித்த வெடிபொருட்கள் 2008 ஆம் ஆண்டு பிரசுரமான சிங்கள பத்திரிகையொன்றினால் பொதி செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட ஒரு பொதியாக கருத முடியும்.

1989 ஆம் ஆண்டு ஜே.வி.பி கலவரத்தின்போது பதுக்கி வைக்கப்பட்ட துப்பாக்கிகளும் ஆயுதங்களும் இன்றும் ஆங்காங்கே மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் 30 வருட கொடிய யுத்தமொன்று வடக்கில் இடம்பெற்றது. இதன்போது ஆங்காங்கே பதுக்கப்பட்ட ஆயுதங்களும் ஆயுததாரிகளால் கைவிடப்பட்ட வெடிபொருட்களும் ஏனைய பொருட்களும் இன்னும் ஐந்து பத்து ஆண்டுகளுக்கு மீட்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இது சாதாரண விடயமாகும்.

மீட்கப்பட்ட பொருட்களை வைத்து, தமிழ் மக்கள் மீது ஆபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களுக்கு இன்று ஆயுத கலாசாரத்தின் மீது நம்பிக்கை வைக்கும் பலம் இல்லை. அத்துடன் அவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அதிகமானவற்றை இழந்து விட்டனர். இதனால் ஆயுத கலாசார மன நிலைக்கு இனியொருபோதும் அவர்கள் செல்லப்போவதும் இல்லை.

வெறுமனே சில ஆயுதங்கள் மீட்கப்பட்டதை வைத்து, சிங்கள மக்கள் மத்தியில் விசம பிரச்சாரங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கையினை ஒன்றிணைந்த எதிரணி மேற்கொள்கிறது. இது இவர்களின் சிறுபிள்ளைத்தன அரசியலை கட்டுக்கின்றது. அத்துடன் பயங்கரவாதத்தை காட்டி அரசியல் செய்கின்ற கலாசாரத்தை மீண்டும் அரசங்கேற்ற முயற்சிக்கின்றனர்.

கொள்ளை மோசடி போன்றவற்றில் ஈடுபட்டு நாட்டை  அதல பாதாளத்துக்கு தள்ளிய மஹிந்த தரப்பினர், தற்போது அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர். தம்மை அரசியல் ரீதியில் ஸ்திரப்படுத்திக்கொள்வதற்காகவும் நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகவும் பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் குறித்த தகவலை எதிரணியினரே வெளியிட்டனர். அத்துடன் தினேஷ் குணவர்தன எம்.பி. கூறியதனை அடிப்படையாக கொண்டுதான், தான் தகவலை வெ ளியிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்கு மூலம் அளித்திருக்கின்றார். எனவே கூட்டு எதிரணியினர் மீது பெரும் சந்தேகம் நிலவுகின்றது.

மஹிந்தவும் அவரது சகாக்களும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என விகாரைகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான வெடிபொருட்கள் மீட்கப்படுவதன் மூலம், நாட்டில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என மக்கள் மத்தியில் கூறி வருவதனூடாக எவ்வித பயனும் கிடையாது.

எவ்வாறாயினும் கூட்டு எதிரணியினம் மேற்கொள்ளும் சதிகளை இலகுவாக முறியடிக்கும் வல்லமையை அரசாங்கம் கொண்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் சாவகச்சேரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விஷேட உரையாற்றுவார். இதன்போது உண்மை வெளிவரும். எனவே தமிழ் மக்கள் எதற்கும் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்