மு.கா.வுக்குள் உக்கிரமடையும் போர்; பஷீரின் ‘ஷேட்’ நிறத்தைக் குறிப்பிட்டு, ஹக்கீம் தாக்குதல்

🕔 March 19, 2016

Basheer - 01
– முன்ஸிப் –

முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டின் இரண்டாவது அமர்வில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நிகழ்த்திய உரையானது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மு.காங்கிரசின் 19ஆவது தேசிய மாநாடு, இன்று சனிக்கிழமை பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மாநாட்டின் முதல் அமர்வில் ஜனாதிபதி, பிரதமர், கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – சிங்கள மொழியில் ஓர் உரையினை நிகழ்த்தியிருந்தார்.

இந்த மாநாட்டில் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது. இவர்கள் இருவரும் மு.கா. சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கோரியிருந்தனர். ஆயினும் அவை இன்னும் வழங்கப்படவில்லை.

இதனால், இன்றைய மாநாட்டில் கலந்து கொள்ளாமல் செயலாளர் ஹசனலி பகிஸ்கரிப்புச் செய்திருந்தார். ஆயினும், தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மாநாட்டுக்கு வருகை தந்தார்.

பஷீருக்கு தடை

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் மேடைக்கு சமூகமளித்த பின்னரே, தவிசாளர் பஷீர் மாநாட்டுக்கு வருகை தந்தார். இதன்போது மேடையேற முற்பட்ட பஷீரை, ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேடை ஏற விடாமல் தடுத்தனர். இதனால், மேடையின் முன்பாக போடப்பட்டிருந்த மதத் தலைவர்கள் உள்ளிடோருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியில் பஷீர் அமர்ந்து கொண்டார்.

பின்னர், இதனை அவதானித்த ஏற்பாட்டாளர்கள் பஷீரை, பிரதான மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

பச்சை – மஞ்சளில் ஷேட்

பஷீர் சேகுதாவுத் இன்றைய நிகழ்வுக்கு அணிந்து வந்திருந்த ‘ஷேட்’டின் நிறம் வித்தியாசமானது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிறமான, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களைக் கொண்ட ஒரு  ‘ஷேட்’டினை பஷீர் அணிந்து வந்திருந்தார்.

இந்த நிலையில், மாநாட்டின் இரண்டாம் அமர்வில் கட்சித் தலைவர் ஹக்கீம் உரையாற்றியபோது, ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவுத் ஆகியோரைக் குறிவைத்துத் தாக்கினார். ஆயினும், அந்த நேரத்தில் பஷீர் அங்கு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மு.கா. தலைவர் ஹக்கீம் இங்கு உரையாற்றும்போது – கட்சியின் தலைமைக்கு எதிராக, கட்சிக்குள் இருக்கும் சிலர் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

அசிங்கமும் – வேதனையும்

அந்த உரையின் ஓர் இடத்தில் அவர் மேலும் கூறுகையில்; “கடந்த காலங்களில் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று, அரசாங்கத்துக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும்  நிர்ப்பந்தத்துக்கு எங்களை உள்ளாக்கியவர்கள், இன்று இந்த மேடையில் கட்சியின் நிறத்தில் ‘ஷேட்’டுக்களை உடுத்துக்கொண்டு, அமர்ந்திருந்து விட்டுப் போகிற அசிங்கம் நடைபெறுவதையிட்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன்” என்றார்.

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அண்மைய நாட்களில் – செயலாளர் ஹசனலி மற்றும் பஷீர் சேகுதாவுத் ஆகியோர் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, பஷீர் குறித்து ஹக்கீம் இவ்வாறு கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்