
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 360 இணையவழி நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று, இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது.
இவற்றில் 14 சம்பவங்கள் குழந்தைகள் சம்பந்தமானவையாகும். இது சிறார்கள் இணையவழி மோசடிகள் மற்றும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு அதிகளவில் ஆளாகும் அபாயம் குறித்து கவலைகளை எழுப்புவதாக முன்னணி தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாருக தமுனுபொல கூறியுள்ளார்.

மேலும், 40 வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இது நாடு முழுவதும் உள்ள பயனர்களை இலக்காகக் கொண்ட – சமூக ஊடக அடிப்படையிலான இணையவழித் தாக்குதல்களின் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இணையதளங்களைப் பயன்படுத்தும்போது, குறிப்பாகத் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கு அல்லது இணையவழிப் பணம் செலுத்துவதற்கு முன்பு வலைத்தளங்கள் மற்றும் இணைப்புகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து, விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இணையப் பயனர்களுக்கு SLCERT அறிவுறுத்தியுள்ளது.


