
வவுனியா மாநகர சபை மற்றும் அதன் மேயர் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை, உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
ஆயினும், பிரதி மேயருக்கு எதிரான இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர சபை மற்றும் அதன் மேயரை இடைநீக்கம் செய்தது முறையற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம், மாநகர சபையையும் மேயரையும் கடமைகளைச் செய்வதிலிருந்து தடுப்பது பொருத்தமற்றது எனக் கண்டித்துள்ளது.
அதே நேரத்தில், பிரதி மேயர் தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடரலாம் என்றும் அது தீர்ப்பளித்துள்ளது.

பிரதி மேயர் தனது பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தை அறிவித்தால், மாநகர சபை செயலாளர் அந்த ராஜினாமாவை ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது. வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற அடிப்படையில் செயலாளர் அதை ஏற்க மறுக்க முடியாது.
வவுனியா மாநகர சபையின் பிரதி மேயராக பரமேஸ்வரன் கார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சியி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், மாநகர சபை செயல்படுவதைத் தடுக்கும் வகையிலும், மேயர் எஸ். காண்டீபன் மற்றும் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்திபன் ஆகியோர் தத்தமது பதவிகளில் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவுக்கு எதிராக – பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. வவுனியா மாநகர சபை மற்றும் மேயர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துஷன் ஆகியோர் ஆஜராகினர்.
பிரதி மேயர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் கரியப்பர் தனது வாதங்களை முன்வைத்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூல வழக்கைத் தாக்கல் செய்த தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சலியா பீரிஸும் உச்ச நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் மேனக விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டது.
அனைத்து வாதங்களையும் பரிசீலித்த பின்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபை – நீண்ட காலத்திற்கு முடங்கிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதன்படி, மாநகர சபை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், மேயர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
எனவே, மாநகர சபை மற்றும் மேயரைப் பாதிக்கும் வகையிலான, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இருப்பினும், பிரதி மேயருக்கு எதிரான இடைக்கால உத்தரவு தொடரும்.
பிரதி மேயர் தானாக முன்வந்து ராஜினாமா செய்தால், மாநகர சபையின் செயலாளர் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது.


