தலைப்புச் செய்திகள்

50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய மொபைல் போன்கள் மற்றும் பெட்டரிகளை கடத்திய சீனர்கள் விமான நிலையத்தில் கைது

பெருமளவிலான மொபைல் போன்கள் மற்றும் பெட்டரிகளை – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நாட்டிற்குள் கடத்தி வந்த, மூன்று சீன நாட்டினரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் நேற்று மாலை (19) வருகை முனையத்தில் உள்ள பசுமை வழித்தடம் (Green Channel) வழியாக வெளியேற முயன்றபோது கைதாகினர்.

இவர்கள் சீனாவின் ஷாங்காயிலிருந்து – சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-6017 மூலம் மாலை 6.43 மணிக்கு இலங்கைக்கு வந்தடைந்தனர்.

அவர்களில் 34 வயதான ஒரு சீனப் பெண்ணும், 35 வயதுடைய இரண்டு ஆண் பயணிகளும் அடங்குவர்.

ஒரு ஆண் பயணி, வரிவிலக்கு பொட்டலங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு கருப்பு பாலித்தீன் பையை எடுத்துக்கொண்டு பசுமை வழித்தடத்தில் நுழைந்தபோது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையின்போது, ​​சொக்லேட்டுகள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலதிக சோதனைகளில், ஒரு ஜாக்கெட்டிற்கு அடியில் அணியப்பட்ட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள், காலுறைகள் மற்றும் காலணிகளுக்கு உள்ளேயும், மற்றொரு சந்தேக நபர் எடுத்துச் சென்ற பயணப் பைக்குள்ளும் கூடுதல் சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

மொத்தமாக, சுமார் ரூ. 5.14 மில்லியன் மதிப்புள்ள 87 மொபைல் போன்கள் மற்றும் 140 பெட்டரிகள் மீட்கப்பட்டன.

இந்தப் பொருட்கள் இணையவழி குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதால், சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.