தலைப்புச் செய்திகள்

இரண்டு வெளிநாட்டுக் கப்பல்களை கைப்பற்றியுள்ளோம், இன்னொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினோம்: இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவிப்பு

பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாட்டை ஈரான் விரும்புவதாகவும், ஆனால் உறுதிமொழிகளை மீறுதல், முற்றுகை மற்றும் அச்சுறுத்தல்களே உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கிய தடைகளாக உள்ளன என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ஈரான் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டதால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியதற்கு – அமெரிக்காவே காரணம் என, ஈரானின் மூத்த அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர் என, அல் ஜசீரா கூறியுள்ளது.

அதே நேரம், ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு வெளிநாட்டுக் கப்பல்களைக் கைப்பற்றியதாகவும், கடல்சார் விதிமுறைகளை மீறியதற்காக மூன்றாவது கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, ஈரான் மீதான தனது போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என்றும், போர் நிறுத்தம் எப்போது முடிவடையும் என்பது ஜனாதிபதியின் முடிவாகவே இருக்கும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.