கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

🕔 March 4, 2016
Agriculture coll - 01
– பி. முஹாஜிரீன் –

கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு மட்டம் 5’ ஒரு வருட கால கற்கை நெறியைக் கொண்ட பாலமுனை – இலங்கை விவசாயக் கல்லூரியில், கடந்த வருடம் எப்ரல் மாதம் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இக்கல்லூரியின் உத்தியோகபூர்வத் திறப்பு விழா, பாலமுனை விவசாயக் கல்லூரியின் அதிபரும் உதவி விவசாயப் பணிப்பாளருமான எம்.எப்.ஏ. சனீர் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை விவசாயக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விவசாயத் திணைக்கள விரிவாக்கல் மற்றும் விவசாயப் பயிற்சிப் பணிப்பாளர் ஆர்.எஸ். விஜயசேகரவும் கலந்து கொண்டார்.

விவசாய விரிவாக்க பணிப்பாளர் ஆர்.எஸ். விஜயசேகர இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

“நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வரும் விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு, புதிய தொழில்நுட்ப ரீதியிலான விவசாய செய்கை அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. கிழக்கு மாகாணம் விவசாயத் துறைக்கு பெரும் பங்காற்றி வருகின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் முதல் முதலாக தமிழ் மொழி மூல விவசாயக் கல்லூரி ஆரம்பித்து வைக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பொது மக்கள் காட்டிவரும் அக்கறை மேலும் இதனை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் என்பன காணப்படுகின்றன. இதற்கு அடுத்த படியாக இக்கல்லூரி இப்பிரதேச தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளின் வாழ்வை வழப்படுத்துவதோடு, நாட்டின் அபிவிருத்திக்கு இதன் மூலம் பெரும் பங்களிப்பை வழங்க முடியும்.

இக்கல்லூரியில் போதிக்கப்படும் கல்வி நடவடிக்கைகள் என்.வி.கியூ. மட்டம் 05 தரத்திலானதாகும். இது சர்வதேச தரம்வாய்ந்த கற்கை நெறியாகும். இதனை கற்கக் கூடிய மாணவர்கள் விவசாய டிப்ளோமாதாரிகளாக வெளியேறுவதோடு இவர்கள் விவசாயத் திணைக்களத்தில் இலகுவாக தொழில் வாய்ப்பை பெறுவதற்குரிய வழிவகைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் ஒரு வருட கற்கை நெறியைப் பூரத்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா, எதிர்வரும் மே மாதத்தில் நடத்தப்படும். பின்னர் இக்கல்லூரியை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறைந்த வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் பௌதீக வளம் பற்றாக்குறையாக காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். இது இலங்கையில் காணப்படும் விவசாயக் கல்லூரிகளில் ஒரு முன்மாதிரியான கல்லூரியாகச் செயற்படுமென்றபதில் ஐயமில்லை. உணவு உற்பத்தி செயற்திட்டத்தனை முன்கொண்டு செல்வதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் மேலதிய விவசாயப் பணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர்களான எம்.எஸ்.ஏ. கலீஸ், ஏ.ஆர்.ஏ. லத்தீப், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, முன்னாள் தவிசாளரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்திரணி எம்.ஏ. அன்சில் மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Agriculture coll - 03Agriculture coll - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்