தலைப்புச் செய்திகள்

பூனைகளால் ரேபிஸ் நோய் நாட்டில் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

பூனைகள் மூலம் ரேபிஸ் நோய் – நாட்டில் அதிகளவில் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் சமூக வைத்தியர் டொக்டர் அதுல லியனபதிரண; “ரேபிஸ் 100 சதவீதம் ஒரு கொடிய நோய்” என்று கூறினார்.

உலகளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த தொற்றுநோயிலிருந்து தப்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

விலங்குகளின் மூளை மாதிரிகளை ஆய்வக சோதனை செய்ததில், பூனைகளிடையே ரேபிஸ் அதிகரித்துள்ளதாக டொக்டர் அதுல லியனபதிரண கூறினார்.

குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடித்தால் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டடார்.

கடந்த ஆண்டு நாட்டில் பதிவான ரேபிஸ் நோய் சம்பவங்களில் பெரும்பாலானவை தெருநாய்கள் கடித்தமையினால் மட்டுமல்லாமல், வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்களாலும் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாய்கள், பூனைகள், அணில்கள் மற்றும் கீரிகள் போன்ற விலங்குகள் கடித்தால் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாக – ரேபிஸ் கருதப்படுகிறது.

இலங்கையில் ஆண்டுதோறும் 250,000 முதல் 300,000 வரை – நாய் கடி சம்பவங்கள் பதிவாகின்றன என்று சுகாதார அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், பேண்டிகூட்ஸ் (Bandicoots), புனுகுப் பூனைகள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளின் கடி மூலம் ரேபிஸ் பரவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.