
– றிசாத் எ காதர் –
தொழிற்சங்கங்களோ, வேறு அமைப்பினரோ அல்லது தனிநபர்கள் சிலரோ இணைந்து அரச உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றவோ அல்லது சேவையில் இருந்து இடைநிறுத்தவோ முடியாது என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரவித்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டு வரும் பணிப் புறக்கணிப்பு தொடர்பில், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய – கேள்வியொன்றுக்க பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.
குறித்த ஊடக சந்திப்பு இன்று (20) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறுகையில்;
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கிழக்கு மாகாணத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் சுகாதார சேவைகள் பாதிப்படைந்துள்ளன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சின் செயலாளரை சந்தித்து சிறியதொரு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். அதாவது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அல்லது அவரை இடமாற்றம் செய்யுமாறும் கோரியுள்ளனர்.
தொழிற்சங்கங்களோ, வேறு அமைப்பினரோ அல்லது தனிநபர்கள் சிலரோ இணைந்து அரச உத்தியோகத்தரை – இடமாற்றவோ அல்லது சேவையில் இருந்து இடைநிறுத்தவோ முடியாது.
அதற்கு ஒரு முறைமை இருக்கின்றது. 2021, 2022 மற்றும் 2023 ஆகிய காலங்களில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணை சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், எச்சரிக்கப்பட்டு அந்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த விசாரணை முடிவில் குறித்த வைத்திய அத்தியட்சகர் குற்றமிழைத்தவராக நிரூபணமானால் அவரின் பதவி இல்லாமல் போகும்.
அதுவல்லாமல் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதன் ஊடாக எதுவும் நடைபெறாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்; “இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் கிழக்கு மாகாண மக்களின் சுகாதார சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக ஒரு அரச உத்தியோகத்தருக்கு எதிராக உடனடியாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதற்கான முறைமை சுகாதார அமைச்சிடம் கிடையாது.
எங்களுடைய விசாரணை பிரிவின் ஊடாக, இந்த விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரியுள்ளோம். அந்த விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அமைச்சின் ஊடாக தீர்மானம் எடுக்கப்படும்.
சுகாதார அமைச்சின் செயலாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்தான், அவர் மீது மீண்டும் சுமத்தப்பட்டுள்ளன. புதிய குற்றச்சாட்டுக்கள் எவையுமில்லை. விசாரணையை துரிதப்படுத்த முடியும். அது நிரூபிக்கப்படுமிடத்து குறித்த வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அக்கரைப்பற்று ஆதாரவ வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் மீது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலருக்குள்ள கோபம் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


