தலைப்புச் செய்திகள்

குர்ஆனில் கை வைத்து பதவியேற்றார் நிவ்யோர்க் மேயர் ஸொஹ்ரான் மம்தானி

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர மேயராக ஸொஹ்ரான் மம்தானி குர்ஆன் மீது கை வைத்து பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தில் பதவியேற்ற முதல் முஸ்லிம் மற்றும் இளைய நபர் என்ற பெருமையை, இதன் மூலம் இவர் பெற்றுள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸொஹ்ரான் மம்தானி, வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு – மன்ஹட்டனில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, செயற்படாத சுரங்கப்பாதை நிலையத்தில், குர்ஆனில் கை வைத்து பதவியேற்றார்.

“இது உண்மையிலேயே வாழ்நாளின் மரியாதை மற்றும் பாக்கியம்” என்று, இது குறித்து மம்தானி கூறினார்.

நிவ்யோர்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் நடத்திய இந்த பதவியேற்பு விழா, நகரத்தின் அசல் சுரங்கப்பாதை நிறுத்தங்களில் ஒன்றான பழைய சிட்டி ஹோல் நிலையத்தில் நடைபெற்றது.

ஸொஹ்ரான் மம்தானி நிவ்யோர்க் நிநகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் என்பதோடு மட்டுமல்லாமல், அவர் அந்த நகரத்தின் முதல் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதோடு ஆப்பிரிக்காவில் பிறந்த மேயராவார். மேலும் 34 வயதான இவர் நகரத்தின் இளைய மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.