
இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் இதுவரை 2,497 பில்லியன் ரூபாய் வருவாயை வரலாற்று சிறப்புமிக்க வருவாயை ஈட்டியுள்ளது. இது அந்தத் திணைக்களத்தின் ஆண்டு இலக்கை விட அதிகமாகும் என்று சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சுங்கத் திணைக்கள பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான வருயாய் இலக்காக ஆரம்பத்தில் நிதியமைச்சு2,115 பில்லியன் ரூபாயை வருவாய் இலக்காக நிர்ணயித்திருந்தது. இந்த இலக்கு நொவம்பர் மாதத்திற்குள் தாண்டியது. இதனால் இலக்கு ரூ. 2,231 பில்லியனாக திருத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

இருப்பினும், திருத்தப்பட்ட இலக்கும் தற்போது தாண்டப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த புஞ்சிஹேவா; வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவதோடு, இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் செயல்படுத்தப்பட்ட பல உள் நடவடிக்கைகளாலும் வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டதாக கூறினார்.
“முந்தைய ஆண்டின் வருவாய் இலக்கு ரூ. 1,531 பில்லியனாக இருந்தது. அதே நேரத்தில் வாகன இறக்குமதியை அனுமதிக்கும் முடிவின் அடிப்படையில் 2025ஆண்டுக்கான இலக்கு கணிசமாக அதிகரித்தது” என்று அவர் விளக்கினார்.
“வாகன இறக்குமதிகள் மூலம் கிடைத்த வருவாய், இலக்கை தாண்டுவதற்கு பங்களித்தது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.



