
– அஷ்ரப் ஏ சமத் –
தேசிய லொத்தர் சபை க்கு கடந்த 10 வருட காலத்தில் 33 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என, அந்த சபையின் தலைவர் சிறில் அன்ரனி பெரேரா தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (17) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் குறிப்பிடுகையில்;
“கடந்த கால நல்லாட்சி காலத்தில் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தார். அவரின் கீழ் தேசிய லொத்தர் சபை இருந்தது. அப்போது லொத்தர் சபையின் தலைவியாக சாமிலா பெரேரா பதவி வகித்தார்.
2023 ஆட்சியில் 185 மில்லியன் ரூபாய் சபைக்கு நஷ்டம், ஏற்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சி 10 ஆண்டு காலத்தில் மில்லியன் 33 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல அரசியல்வாதிகள் தமது தேர்தலுக்காகவும் ஜனாதிபதித் தேர்தலுக்காகவும் இச் சபையில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றுள்ளமை கணக்காய்வாளர் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
2015 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தலுக்காகவும் 6.8 மில்லியன் ரூபாய் லொத்தர் சபையிலிருந்து செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மீள அளவிடுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் நல்லாட்சிக் காலத்தில் விமான நிலையத்தில் டொலர் மூலம் அதிர்ஷ்ட லாபச் சீட்டு விற்பனை செய்யப்பட்டது. அதில் கிடைத்த 25,540 டொலரை (இலங்கைப் பெறுமதியில் 78 லட்சம் ரூபாய்க்கும் அதிக தொகை) மீள அறவிடுவதற்கும் சம்பந்தப்பட்ட நபரை சி.ஜ.டியினர் தேடி வருகின்றனர் அவர் தலைமறைவாகி உள்ளார்.
அத்துடன் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மனைவி விற்பனை முகவராக செயற்பட்ட நிலையில், அவரும் 2.1 மில்லியன் ரூபாயை செலுத்தவில்லை.
தேர்தல் காலத்தில் நாமல் ராஜபக்ஷ – இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகித்த காலத்தில், கட்சி கூட்டமொன்றுக்காக சபையிலிருந்து 200 குடைகள் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சபைக்கு 02 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் அரசியல் ரீதியாக லொத்தர் சபையில் தொழில்கள் வழங்கப்பட்டன. இதனால் 6.5 மில்லியன் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் டொலர் மூலம் அதிர்ஷ்ட லாபச் சீட்டு ‘Colombo Airport Super Draw – one Ticket 30 US Dollar’ விற்பனை திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றிய சந்திக்க திமுத்த பீரிஸ் என்பவர் அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் முகவராக செயல்பட்டு அவர் அந்த டிக்கெட்டுகளை 78 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

ஆனால் அவர் பற்றிய முகவரியோ அல்லது ஒப்பந்தமோ, அவரன் முகவர் நிலையம் பற்றியோ எவ்வித தகவலும் இல்லை. அவர் 78 இலட்சம் ரூபாவை செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளார்.
அடுத்த வாரம் நாடாளுமன்ற கோப் குழுவுக்க லொத்தர் சபை அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
மேற்படி நிதி மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை சி.ஜ.டி, கணக்காய்வாளர் திணைக்களம் என்பவற்றுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.


