
– புதிது செய்தியாளர் –
வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவருக்கு, உள்ளூர் ஆண் ஒருவர் தனது பாலுறுப்பைக் காண்பித்த சம்பவம் – அறுகம்பே பகுதியில் நடக்கவில்லை என, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அறுகம்பே சுற்றுலா சபைத் தலைவருமான எம்.எச். றஹீம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் அறுகம்பே பகுதியில் நடந்ததாகவும். பாலுறுப்பைக் காட்டிய நபரை பொலிஸார் தேடி வருவதோடு, அவர் பற்றிய தகவல்களை வழங்குமாறும் பொலிஸ் ஊடகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே, அது அறுகம்பேயில் நடக்கவில்லை எனவும், பொத்துவிலில் இருந்து 22 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சங்கமன்கண்டி எனும் இடத்தில்தான் அந்த சம்பவத்தை – வெளிநாட்டு சுற்றுலாப் பயணி எதிர்கொண்டார் எனவும் றஹீம் கூறியுள்ளார்.
தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றின் ஊடாக, இந்த விடயங்களை றஹீம் குறிப்பிட்டுள்ளார்.
சங்கமன்கண்டியிலுள்ள மயானத்தின் முன்பாக அமைந்துள்ள வீதியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், இது தொடர்பில் வெளியான வீடியோவை வைத்து, இடத்தை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் றஹீம் – மேலும் கூறியுள்ளார்.
நடந்த சம்பவத்துக்கு மேற்படி வெளிநாட்டுப் பெண்ணிடம் தான் மன்னிப்பு கோருவதாகவும், பாலுறுப்பைக் காட்டிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ள பொலிஸாரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று, அங்கு வைத்துப் பேசி – தனது வீடியோவை றஹீம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவருடன், வீதியில் நின்று பேசும் உள்ளூர் ஆண் ஒருவர், தனது ஆண் உறுப்பைக் காட்டும் வீடியோ வெளியானது. அதனை, சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணே பகிரங்கப்படுத்தியிருந்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மேற்படி சம்பவம் கடந்த மாதம் 25ஆம் திகதி நடந்துள்ளது.



