தலைப்புச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: வருடத்தின் 10 மாதங்களில் 2,659 மில்லியன் டொலர் வருமானம்

நாட்டின் சுற்றுலா வருவாய் – இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2025 ஒக்டோபரில் சுற்றுலா வருவாய் 186.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 2,533.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயுடன் ஒப்பிடும்போது இது 4.9% அதிகரிப்பைக் காட்டுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்த வருடம் ஜனவரி முதல் நொவம்பர் 12ஆம் திகதி வரை, நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,972,957 ஆகும்.

இவர்களில், இந்தியாவிலிருந்து 443,622 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய ராச்சியத்திலிருந்து 180,592 பேரும், ரஷ்யாவிலிருந்து 144,308 பேரும், ஜெர்மனியிலிருந்து 123,053 பேரும், சீனாவிலிருந்து 115,400 பேரும் வந்துள்ளனர்.

நொவம்பர் 01 முதல் 12 ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82,270 ஆகும்.