தலைப்புச் செய்திகள்

ரூபவாஹினி ஊழியர்களின் EPF நிதி, 13 மாதங்கள் செலுத்தப்படவில்லை என முறைப்பாடு

லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கடந்த 13 மாதங்களாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (EPF) செலுத்தத் தவறிவிட்டதாக, அந்த நிறுவனத்தின் 07 தொழிற்சங்கங்கள் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளது என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் பிரதிகள் – ஜனாதிபதி செயலாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், தொழில் அமைச்சர், வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளதன் படி, பின்வரும் மாதங்களுக்கான EPF கொடுப்பனவுகள் செலுத்தப்படவில்லை :

2023 : ஓகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர், நொவம்பர்
2024 : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மே
2025 : மார்ச், மே, ஜூன், ஜூலை, ஓகஸ்ட்

இதேவேளை, ரூபவாஹினிக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், டிசம்பர் 2024இல் நியமிக்கப்பட்ட தற்போதைய தலைவர் – கிஹான் டி சில்வா, இதுவரை தனது பதவிக்காலத்தில் 11 மாதங்களில் 05 மாதங்களுக்கு EPF கொடுப்பனவுகளைச் செய்யத் தவறிவிட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ரூபவாஹினிக் கூட்டத்தாபனத்தில் தற்போது சுமார் 600 ஊழியர்கள் பணிபுரிகின்றனர், இவர்களின் சம்பளத்திலிருந்து EPF கொடுப்பனவுக்காக, ஒரு தொகை கழிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, தற்போதைய தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து ரூபவாஹியின் YouTube வருவாயும் 20,000 டொலர்களுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.