தலைப்புச் செய்திகள்

சூடானில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரு கிராமமே அழிந்தது; ஆயிரம் பேர் மரணம்: ஒருவர் மட்டுமே பிழைத்தார்

சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் – ஒரு கிராமம் முழுவதுமாக அழிந்துள்ளது. இதில்1,000 பேர் கொல்லப்பட்டதாக அப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

சூடான் விடுதலை இயக்கம்/இராணுவம் நேற்று (01) திங்கள்கிழமை இரவு டார்ஃபரின் மர்ரா மலைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவைப் பற்றி வெளியிட்ட அறிக்கையில், இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பகுதியில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், தாராசின் எனும் கிராமம் முற்றிலும் தரைமட்டதாகவும் சூடான் விடுதலை இயக்கம் கூறியுள்ளது. இந்தக் கிராமத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.

குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்பதில் உதவி கேட்டு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களிடம் சூடான் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சூடானின் உள்நாட்டு ஆயுத மோதல் மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த மண் சரிவு அனர்த்தம் நடந்துள்ளது. டார்ஃபரின் சில பகுதிகளில் ஏற்கனவே பஞ்சம் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு டார்ஃபர் மாநிலத்தில் சூடான் ராணுவத்திற்கும் – துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான மோதல்களில் இருந்து தப்பி ஓடிய மக்கள், மர்ரா மலைகளில் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர். இந்தப் பகுதியிலேயே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.