
விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் தருவாயில் ராணுவம் இருந்த போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2009 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை யுத்த நிறுத்தமொன்றை அறிவித்ததாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செகா குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு கவுன்சில் இந்த முடிவை எதிர்த்த போதிலும், 48 மணி நேர போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு, ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டது என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, சரத் பொன்சேகா இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் 2009 இல் – விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றியைத் தாமதப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
யுத்தத்தின் போது, தான் கடுமையான காயங்களுக்கு ஆளான போதிலும், தான் பணியாற்றிய தலைவர்களே தன்னை துரோகி என்று முத்திரை குத்தியதாகவும் அவர் கூறினார்.
“எனது நாட்டை நான் நேசிக்கவில்லை என்று கூறிய தலைவரைப் பற்றி, நான் ஒரு ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். 2009 இல், இலங்கை ராணுவம் புதுக்குடியிருப்பை மூன்று பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்தது. நாங்கள் இன்னும் 10 கிலோமீட்டர் மட்டுமே முன்னேற வேண்டியிருந்தது”.
”ஜனவரி 26, 2009 அன்று ராணுவம் முல்லைத்தீவைக் கைப்பற்றியது, 12 மணி நேரத்திற்குள் தெற்கிலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறினோம். ஆனால் மறுநாள், கோட்டாபய ராஜபக்ஷ, என்னிடம் சோர்வடைந்து விட்டீரா என்று கேட்டார். வவுனியாவில் ஜெனரல் ஜகத் ஜெயசூர்யாவிடம் கட்டளைப் ஒப்படைக்குமாறு கூறினார்”.
“அந்த நேரத்தில், நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம். பிரபாகரனும் அவரது குழுவும் அழிக்கப்படவிருப்பதை – அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். ஆனால் அந்த வீழ்ச்சியை நான் தாமதப்படுத்த வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள்” என்று பொன்சேகா கூறினார்.
”விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் தருவாயில் ராணுவம் இருந்தபோதிலும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை போர் நிறுத்தத்தை அறிவித்தார். பாதுகாப்பு கவுன்சில் இந்த முடிவை எதிர்த்தது, ஆனால் 48 மணி நேர போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டது“ என, அவர் விவரித்தார்.
“இதன் விளைவாக ராணுவம் ஐந்து கிலோமீட்டர் பின்வாங்க வேண்டியிருந்தது. நான் சுமார் 500 வீரர்களை இழந்தேன். இந்த போர் நிறுத்தம் – புலிகள் மீண்டும் ஒன்றுகூடி தங்கள் தாக்குதலை மீண்டும் தொடங்க ஒரு வாய்ப்பை வழங்கியது” என்று அவர் குற்றம்சாட்டினார்.
நோர்வே மத்தியஸ்தர் எரிக் சோல்ஹெய்முடன் நடந்ததாகக் கூறப்படும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பிற மூத்த நபர்கள் தப்பிக்க அனுமதிக்கும் நோக்கம் கொண்டதாக, அந்த போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தக் காலகட்டம்தான் ‘வெள்ளைக் கொடி சம்பவம்’ என்று பின்னர் அறியப்பட்ட சம்பவத்துடன் இணைக்கப்பட்டதாகவும், இதனை வைத்து – பின்னர் தனது தலைமையிலான இலங்கை ராணுவத்தின் மீது, விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“பிரபாகரன் ஒரு முட்டாள். இந்த போர் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெற முடியும் என்று அவர் நம்பினார். அவர் தப்பிக்கவில்லை – அவர் எங்களுடன் சண்டையிட்டார்” என்று சரத் பொன்சேகா கூறினார்.
போரின் போது மஹிந்த ராஜபக் அரசியல் கணக்குப்பார்த்ததாகவும், 2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கு 02 மில்லியன் டொலர்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டினார்.
“2005 ஆம் ஆண்டில், அந்த 2 மில்லியன் டொலர்கள் வழங்கியதால், 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவருக்கு வெற்றி கிடைத்தது. ஏனெனில் மக்கள் வாக்களிப்பதை பிரபாகரன் தடுத்தார். இந்தப் பணப்பரிமாற்றம் நடந்த இடத்திற்கு டிரான் அலஸும் சென்றிருந்தார். 2010 ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் இதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். நான் ராணுவத் தளபதியாக இருந்தபோது, இந்த சம்பவம் குறித்து பசில் ராஜபக்ஷ என்னிடம் கூறினார். இந்தப் பணப்பரிமாற்றம் நடந்தபோது ஒரு மலையக அரசியல்வாதியும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த அரசியல்வாதி சமீபத்தில் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாக்கப்பட்டதைக் காண முடிந்தது” என்று பொன்சேகா அந்த நபரின் பெயரைக் குறிப்பிடாமல் கூறினார்.
2010 தேர்தலுக்கு முன்பு பிரபாகரன் கொல்லப்பட்டால், தமிழ் வாக்காளர்கள் அவரை பெருமளவில் எதிர்ப்பார்கள் என்றும், 2010 இல் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ அஞ்சியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
“நானும் நீங்களும் நாட்டைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதும், போரின் முடிவைக் கொண்டாடக் காத்திருந்தபோதும், அவர் நினைத்தது தேர்தலைப் பற்றித்தான். இதுதான் மஹிந்த ராஜபக்ஷவின் மனநிலை. இப்போது அவர் என்னை நாட்டை நேசிக்காதவர் என்று கூறுகிறார்”என, சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.



