
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் ஹரினி அமரசூரிய பார்ப்பதற்குச் சென்றார் என, ஹிரு வெளியிட்ட செய்தி தொடர்பில், அந்த ஊடகம் விளக்கமொன்றை வழங்கியுள்ளது.
அதில், வைத்தியசாலைக்கு பிரதமர் சென்றதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தியதை அடுத்து, ஹிரு செய்தி இணையதளத்தில் , குறித்த செய்தி வெளியிடப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து – ஹிரு வெளியிட்டுள்ள முழுமையான செய்தி வருமாறு;
‘கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து விசாரிக்க, தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று முன்தினம் (24) நள்ளிரவில் வைத்தியசாலைக்குச் சென்றதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தியதை அடுத்து, ஹிரு செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நாட்டின் சமூக மற்றும் கலாசார சூழலில், கட்சி வேறுபாடின்றி, யாரேனும் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்தாலோ ஒன்றிணைக்கும் சமூக மற்றும் அரசியல் அமைப்பு உள்ள ஒரு நாட்டில், இந்த சம்பவத்தில் எந்தத் தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
எனினும், இந்தச் செய்தி வெளியிடப்பட்டவுடன், பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் நாங்கள் வெளியிட்ட செய்தி நிராகரிக்கப்பட்டது.
ஒரு நெறிமுறை ஊடகமாக பதிலளிக்கும் உரிமையை மதித்து, பிரதமரின் செயலாளர் கையொப்பமிட்ட அறிக்கையை எங்கள் இணையதளத்தில் வெளியிட்டோம், ஹிரு இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளுக்கு சமமான முன்னுரிமையை அளித்தோம்.
அதே நேரத்தில், ஹிரு இணையத்தளம் சதித்திட்டமாக – தவறான செய்திகளைப் பரப்ப முயற்சித்தது என்ற குற்றச்சாட்டை நாங்கள் வன்மையாக நிராகரிக்கிறோம்.
இதுபோன்ற குறுகிய நோக்கங்களுடன் ஊடகப் பணிகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம் என்பதையும், மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்’.


