தலைப்புச் செய்திகள்

திரைப்பட இயக்குநர் பெயரில் ஏமாற்றி, பெண்களிடம் நிர்வாண வீடியோகளை பெற்றுவந்த நபர் கைது

இயக்குநர் சோமரத்ன திசாநாயக்க

லங்கை திரைப்பட இயக்குநர் சோமரத்ன திசாநாயக்கவின் பெயரில் ஏமாற்றி, இளம் பெண்களிடமிருந்து நிர்வாண வீடியோகளைப் பெற்ற ஒருவர் – பொல்கஹவெலவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணிணி குற்றப் பிரிவில் – சோமரத்ன திசாநாயக்க வழங்கிய முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

அந்த நபர் சோமரத்ன திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, இளம் பெண்களை திரைப்படங்களில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக உறுதியளித்து, அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்றுள்ளார் என்பது, விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர், 2023ஆம் ஆண்டு முதல் இந்தப் பொய்யான செயலில் ஈடுபட்டு வருவதாகவும், 20 முதல் 35 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 20 பெண்களிடமிருந்து நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோகளைப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பொல்கஹவெலவில் கைது செய்யப்பட்ட நிலையில், இவருக்கு வீடியோ, புகைப்படங்களை வழங்கிய 06 பெண்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

குறித்த நபர் – போலியான பேஸ்புக் கணக்கு மூலம் பெண்களைத் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் வாட்ஸப் எண் மூலம், அவர்களின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.