தலைப்புச் செய்திகள்

பொலிஸாரில் 40 வீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பதில் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 40 வீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொலிஸாரிடையே தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸாரின் குழந்தைகளுக்கு பாடசாலைப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகையில், அவர் இதனைக் கூறினார்.

“பொலிஸாரின் நிலையைப் பார்த்தால், சுமார் 20% முதல் 40% பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30% பேர் இன்னும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. மீதமுள்ள 30% பேர் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். சில உத்தியோகத்தர்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகள், வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் பிற காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களிடையே பல்வேறு தொற்றா நோய்கள் பரவுவதற்கு வழிவகுத்துள்ளது” என்று கூறினார்.

தற்போது பொலிஸார் மிகக் குறைந்த சம்பளத்தைப் பெறுவதாகவும், இந்தப் பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

அதன்படி, வரும் ஆண்டுக்கான புதிய சம்பளக் கட்டமைப்பைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.