தலைப்புச் செய்திகள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தன பதவி நீக்கம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னர் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பணியாற்றிய நிலந்த ஜெயவர்தனவை, உள்ளக விசாரணை நடைபெற்றமையினால் – ஜூலை 2024 இல் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இந்தப் பின்னணியில், குறித்த விசாரணையின் முடிவில், நிலந்த ஜெயவர்தனவை சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவு செய்தது.

ஜூலை 4, 2025 அன்று மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயத்தால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கையின்படி, கட்டாய விடுப்பில் இருந்த நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 75 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கத் தவறியமைக்காக, நிலந்த ஜெயவர்தன மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்தார்.

ஜனவரி 12, 2023 அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் அரச புலனாய்வு துறையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜெயவர்தன ஆகியோர் தாக்குதல்களைத் தடுக்கக்கூடிய சாத்தியமிருந்தும் அவற்றைத் தடுக்கத் தவறியதன் மூலம் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் இழப்பீடு வழங்குமாறு மேற்படி நபர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.