
ஆயுர்வேத வைத்தியர் நியமனங்களை, 304 பேருக்கு வழங்குவதற்கான அங்கிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று – சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஆயுர்வேதத் துறையில் 1,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரையும் அரசு சேவையில் உள்வாங்க முடியாது என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் – சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் மேற்கொண்ட ஆய்வு விஜயத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இந்த வைத்தியர்களுக்கு வதிவிடப் பயிற்சி வழங்கிய பிறகு, அவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பணிபுரிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், அவர்களில் ஒரு பகுதியினரை – பின்னர் அரசாங்கம் ஆட்சேர்ப்புச் செய்து சுற்றுலாத் துறைக்கு நியமிக்க முடியுமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்..
தற்போதுள்ள நடப்பு வரவு – செலவுத் திட்டத்தில், மேலைத்தேய வைத்தியத்துறையுடன் ஒப்பிடும்போது, உள்நாட்டு மருத்துவத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.



