
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று (11) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவுடன் சிவம் பாக்கியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடன் கூட்டணி அமைக்கும் அளவுக்குச் சென்றது’ எனவும் அவர் கூறியுள்ளார்.
பல கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தடுப்புக் காவலில் இருப்பதால், அதிகாரத்தைத் தேடி அத்தகைய நபருடன் கூட்டணி வைக்க அரசாங்கம் தயாராக இருப்பது கடுமையான ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.
34 ஆசனங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில், இம்முறை நடந்த தேர்தலில், இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களை வென்றது. ஐக்கிய மக்கள் சக்திக்கு 02 ஆசனங்கள் உள்ளன.



