
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சட்ட வரைவாளர் இந்த சட்டமூலத்தை இறுதி செய்து – அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுச் செலவினங்களைக் குறைப்பதற்கும் அரசியல் பொறுப்புக்கூறலில் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன உரிமங்கள் வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
இவ்வருடம் ஜனவரி மாத தகவல்களின் படி, மொத்தம் 330 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுகளைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மரணமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 182 வாழ்க்கைத் துணைவர்களுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இதனால் ஓய்வூதியம் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 512 ஆகும்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பாக 07 பேர் – நிதிப் பலன்களைப் பெற்று வருகின்றனர்.
இதன்படி, ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதத்திற்கு மொத்தமாகப் பெறும் தொகை 02 கோடி 35 லட்சத்து 41,645 ஆகும். இறந்த எம்.பிகளின் வாழ்க்கைத் துணைவர்கள் மாதத்திற்கு பெறும் மொத்தத் தொகை 01 கோடி 10 லட்சத்து 25,216 ரூபாய். எம்.பி.க்களின் சார்புடையவர்கள் மொத்தமாக பெறும் தொகை மாதத்திற்கு 04 லட்சத்து 20,121 ரூபாய் ஆகும்.



