
ஹமாஸ் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) ஆகிய அமைப்புகள், நாளை (15) விடுவிக்கவுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ள நிலையில், அதனை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது.
அலெக்சாண்டர் ட்ருஃபனோவ், சாகுய் டெக்கல்-சென் மற்றும் யாயர் ஹார்ன் ஆகிய மூன்று ஆண் இஸ்ரேலிய கைதிகள் – நாளை காசாவில் விடுவிக்க உள்ளனர்.
இதற்கு ஈடாக, இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 369 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். இவர்களில் 36 பேர் நேரடி தண்டனை அனுபவித்து வருபவர்களாவர். 333 பேர் காசாவைச் சேர்ந்தவர்கள் என்று பாலஸ்தீன கைதிகள் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, போரை மீண்டும் தொடங்குவதா அல்லது பேச்சுவார்த்தைகளை நடத்துவதா என்பது குறித்து இஸ்ரேலில் ‘ஒரு போராட்டம்’ நடந்து வந்ததாக, இஸ்ரேலில் உள்ள பார்-இலன் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியர் மெனாச்செம் க்ளீன் – அல் ஜசீராவிடம் கூறியுள்ளார்.
போரை மீண்டும் தொடங்குவதில் ராணுவம் ஆர்வம் காட்டவில்லை என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒரு ஒப்பந்தத்தை கோருவதாகவும் கூறியுள்ள அவர், நெதன்யாகு போரை மீண்டும் தொடங்குவதிலும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதிலும் ஆர்வமாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
ராணுவம் சோர்வடைந்துவிட்டதாகவும், தலைமைத் தளபதியை மாற்றுவது உட்பட தன்னை மறுசீரமைக்க வேண்டும் என்றும், போர் நடந்து கொண்டிருக்கும் போது இதைச் செய்ய முடியாது என்றும் க்ளீன் குறிப்பிட்டுள்ளார்.
போர் மீண்டும் தொடங்கி – ராணுவ சேவைக்கு மக்களை ராணுவம் அழைத்தால், சில இஸ்ரேலியர்கள் சேவை செய்ய மறுக்கும் நிலையில் உள்ளதாகவும், ஒட்டுமொத்த இஸ்ரேலிய சமூகத்திற்கும் ‘ஓய்வு தேவை’ என்றும் அவர் கூறியுள்ளார்.
“நெதன்யாகு இப்போது போரை மீண்டும் தொடங்குவதற்கான தனது விருப்பத்தை கைவிட்டுள்ளார். அது சாத்தியமா என்று பார்க்க சிறிது நேரம் கழித்து அதை ஒத்திவைத்தார் என்பது எனவு பார்வையாகும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



